இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும், எழுத்துகளும் - பாகம் 3
என் எணணங்கள்
நான் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல், இந்த போராட்டத்தை பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளும் அதற்கு என் வாசிப்பில் தோன்றிய புரிதல்களையும் ஒரு வினா விடை வடிவமைப்பில் இப்பகுதியில் எழுதுகிறேன்.
கேள்வி: ஏன் இந்த சண்டை இருபதாவது நுற்றாண்டில், ஆஙகிலேய அட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின் ஏற்பட்டது?. இலங்கையின் முந்தைய வரலாற்றில் இப்படியோறு சச்சரவுக்கு உதாரணங்கள் ஏதும் உள்ளனவா ?
விடை: இலங்கையில் இனக் கலவரம் என 19வது நுற்றாண்டுக்கு முன்னர் வரலாறு இல்லை என்றாலும், இலங்கையின் தெற்கு பகுதியில் பௌத்த சிங்கள அரசுகளும், வடக்கில் தமிழ் இந்து அரசுகளும் மேலோங்கி இருந்தன. தமிழ் அரசர்களுக்கும், சிங்கள அரசுகளுக்கும் இடையே சச்சரவுகள், படையெடுப்புகள் இருந்தாலும் வரலாற்றாசிரியர்கள் அவற்றை இன பிரச்சனை என்று வகைப்படுத்துவதில்லை. சிங்கள அரசர்கள் கூலிபடைகளாக தமிழகத்தில் இருந்து தமிழ் வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் நாளடைவில், சிங்கள சமுதாயத்தின் ஒரு சாதியாக உள்வாங்கப்பட்டனர். சிங்கள அரசர்கள் தமிழ் அரசிகளை மணம் செய்து கொண்டனர். சிங்களர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு இடையே அடர்ந்த காடுகள் இருந்தமையால், படையெடுக்கும் பேரரசுள் இல்லாத தருணங்களில் தொடர்புகள் குறைவாகவே இருந்தது.
சிங்களர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய மற்றோரு காரணம் ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட அதிகாரத்துவ அமைப்பு (bureaucracy). இந்த அதிகாரத்துவ அமைப்பின் அரசு வேலைகளின் பெரும் பாகத்தை , யாழ்ப்பாணத்தின் மேல் சாதி வேளாளர்கள் பெற்றுக் கொண்டது.
கேள்வி: தமிழ் சமூகத்தின் மனோபாவம் இக்காலங்களி்ல எப்படி பட்டதாக இருந்தது?. தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்த சவாலை எவ்வாறு சந்தித்தனர்?.
விடை: சாதி சமூகத்திற்கே உள்ளார்ந்த குணங்களான படைப்பாற்றல் இல்லாமை, செல்வாக்குக்கும், அந்தஸ்துக்கும் மூர்க்க வெறியுடன் போட்டியுடும் மனப்பாண்மை எல்லாம் தலையோங்கி நின்றது. தமிழ் மக்களில் கலாச்சார மேண்மை அடைந்தவர்களாக கருதப்பட்ட யாழ்ப்பான வேளாளர்களின் முயற்சி முழுவதும் அரசாங்க உத்தியோகஸ்தை அடைய வேண்டும் என்பதே. தமிழினி கூறும் ஒரு நிகழ்வு இலங்கை தமிழர்களின் மனப்பாண்மையை விளக்குவதற்கு உதவும். புலிகளின் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு மாணவி ஒருவள் ஆயுத பயிற்சிக்கு அனுப்பபடுகிறாள். மகளை தேடி தந்தை வருகிறார். தமிழினி தான் விடுதலைப் புலிகள் சார்பாக அவரை எதிர் கொள்ள வே்ண்டியிருந்தது. தமிழினியிடம் அவர் சொன்னது "தங்கச்சி , நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை; போகட்டும் , ஊரோட ஒத்ததுதான் எனக்கும் . ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா (Doctor) எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது , நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம் . அத நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு". சமூக நிலை குறித்த பதற்றம், சாமானிய மக்கள் மத்தியிலும் ஊறி இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
இலங்கை விடுதலை பெறும்போது ஏற்பட்ட மிகப் பெரிய கேள்வி, தேயிலை தோட்டங்களில் வேலைக்காக கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து வந்து, பின்னர் இலங்கையிலே நிரந்தரமாக தங்கியவர்களுக்கு சட்டபடி குடியுரிமை அளிப்பதா என்பதை பற்றி. பெரும்பாலான இத்தமிழர்கள் கீழ் சாதியினராக இருந்தபடியால் என்னவோ, அப்போது தலைமை வகித்த யாழ்ப்பான மேல்மட்ட தமிழ் அரசியல்வாதிகள் சக தமிழர்களின் இப்பிரச்சினைக்கு அக்கறை காட்டவில்லை. தமிழ் சமுதாயமும், தமிழர்களும் சுயநலவாதிகள் என்று பரவலாக நம்பப்பட்ட நம்பிக்கைகள் இவ்வாறான அரசியல் தீர்வுகளால் வலுப்பெற்றது. சிங்கள இனவாதம் காலப்போக்கில் தீவிரமடைந்து தமிழர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட போது அதனை படைப்பாற்றலுடன் கையாள தமிழ் சமுதாயத்திற்கு முடியவில்லை. படிப்பும், அதில் இருக்கும் அந்தஸ்தையும் தங்கள் சொந்த அடையாளமாக கருதிய யாழ்ப்பான நடுத்தர மக்களுக்கு, வாழ்க்கைக்கு வேறு வழியே இல்லாத இருட்டாக எதிர்காலம் தோன்றியது. தங்கள் சொந்த கால்களில் நின்று தொழில்களையோ, இலங்கையின் கிழக்கில் விவசாயத்திற்கு திறக்கப்பட்ட வெறுமையான நிலங்களை பயிர் செய்யவோ அவர்கள் மனோபவம் அனுமதிக்கவில்லை. இதற்கு மாறான உதாரணமாக தென் அப்ரிக்காவில் உள்ள வெள்ளயர்களின் அனுபவத்தை கூறலாம். நிறவெறி (apartheid) ஆட்சியின் முடிவுடன், அரசு வேலைகள் கறுப்பர்களுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்ட போது, வெள்ளயர்கள் அதனை பெரிதாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஜாதிய ( ஆனால் இனவாதிகள்- racist's) மனோபாவம் அவர்களுக்கு இல்லாததால் தொழில் மற்றும் விவசாயத்தில் தங்களுக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொண்டனர். அவர்கள் கலாச்சாரத்தில், பொருள் சார்ந்த உலகத்தில் செய்யும் வேலைக்கு ஆங்கீகரிப்பு (respect for work in the material world) மற்றும் சமூக அந்தஸ்த்து தான் வாழ்க்கையின் தேர்வுகளை நிச்சயித்தல் போன்றவை இல்லாததால் அவர்களால் மாற்றங்களை வெற்றிகரமாக கடந்து வரமுடிந்தது.
தமிழர்கள் சிலர் மேற்கத்திய உலகிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். தமிழ் அரசியல் தளமானது, நிதர்சனத்தை மறுக்கும் மேடை பேச்சாளர்களின் டம்பமும் லாவகமுமான பேச்சால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதில் தமிழ் நாட்டில் இருந்து சென்ற திராவிட இயக்கத்தாருக்கும் பெரும் பங்கு உண்டு என்பது இலங்கையில் அப்போது வாழ்ந்த என் உறவினர்களின் கருத்து. எதிர் தரப்பினை துரோகிகள் என்று கூறுவதும், எதிர்வினைகளை யோசிக்காமல் வன்முறையை கூவிடும் சொற்பொழிவுகள் நிகழத்துவதும் சாதாரணமாகியது. இதுவே தமிழ் அரசியலில் நடந்த முதல் கொலைக்கும் வழி வகுத்தது. ஆல்ஃப்ரெட் துரையப்பா யாழ்ப்பான நகரத்தின் மேயராக இருந்த போது பிரபாகரனும் அவனுடைய கூட்டாளிகளாலும் கொல்லப்பட்டார். சாமானிய மக்களிடேயே நற்புகழ் பெற்ற அவர், நகரின் குடிமை பணிகளில் தன் முழு ஆற்றலையும் செலவளித்தார். தமிழ் தேசியத்திலோ, தேசிய அரசியலிலோ அவருக்கு ஆர்வம் இல்லை. தன் பணிகள் நிமித்தமாக, சிங்கள அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்திருந்தார். தங்களுடைய தமிழ் தேசிய கொள்கைக்கு இணங்கவில்லை என்பதற்காக இனத் துரோகி என்ற பட்டத்தை அவர் மேல் சாத்தினார்கள். அரசியல்வாதிகளின் உணர்ச்சிகரமான வசைப் பேச்சு, அரசியல் புரிதலே இல்லாத இளவயது பிரபாகரன் கையில் கொலையாக மாறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் செயல்படும் வரையைறகள், அதில் அவர் பிரபலமாக இருப்பதற்குறிய காரணங்கள் பற்றிய புறிதலோ, மரியாதையோ இல்லாமல் ஒரு உணர்ச்சிவசப்பட்ட மேலீடான பார்வையே தமிழ் அரசியலின் மோசமான முடிவுகள் பலவற்றிற்கு காரணமாயிற்று. தமிழினியின் கூரிய பார்வைக்கு இது மறையவில்லை. தன் புத்தகத்தில் ஓரிடத்தில், விடுதலைப் புலி இயக்கத்தில் தான் இணையும் தருவாயை இவ்வாறு எழுதுகிறாள். "எமது மூத்த அரசியல் தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்".
நாளடைவில் தமிழ் சமுதாயத்தின் பாதையை நிர்ணையி்ப்பது துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் இருபது வயது இளைஞர்களிடம் சென்றடைந்தது.
கேள்வி: தமிழ் போராளி இயக்கங்களுக்கு நடுவில் ஏன் வன்முறை தலைவிரித்தாடியது?. தமிழ் ஈழ போராட்டம் சிறிதளவும் பெருந்தன்மையோ, இரக்கமோ இல்லாதது போல் ஏன் காட்சியளிக்கிறது?
விடை: "ஈழப் போரில் எனது சாட்சியம்" என்று கனேச ஐயர் எழுதிய புத்தகத்தில் அவர் கட்டற்ற வண்முறைக்கு காரணம், மக்களில் இருந்து தனிப்பட்டு, இரானுவ தளத்தில் மட்டும் போராளி இயக்கங்கள் செயல்பட்டதே என்கிறார். மக்களுடைய ஆதரவை நம்பி இயக்கங்கள் வேலை செய்திருந்தால், சில வரம்புகளுக்குள் இயங்க வேண்டிய நிலமை இருந்திருக்கும். நிதி தேவைக்கு வங்கிகளை கொள்ளையிடுவதும், வணிகர்களை மிரட்டுவதும் ஆரம்பம் முதலே போராளிகள் பின்பற்றிய வழிமுறை. பின்னர் இந்திய (RAW) , தமிழக அரசின் பண உதவிகளும், இறுதியில் மேற்கத்திய நாடுகளுக்கு சென்ற அகதிகளிடம் திரட்டிய காசும், பொறுப்பற்ற நடத்தைகள் நடக்கும் இந்த சூழலை நீடிக்க வைத்தது.
போராளிகள் இயக்கங்களுக்கு இடையே எழுந்த சண்டைகளில், விடுதலைப் புலிகள்(LTTE) கொடூரமாக சக தமிழ் போராளிகளை அழித்தனர். பின்னர் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஓரேப் பிரதிநிதியாய்; பிரபாகரன் என்ற ஒருவரின் தலைமைக்கு கீழ் செயல்பட்டனர். எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய விடையம், பிரபாகரன் என்ற ஆளுமை இல்லாமல் தமிழ் ஈழ போராட்டம் இத்தனை வலிமையானதாகவும், இவ்வளவு காலம் நீடித்து இருந்திருப்பதற்கும் சாத்தியம் இல்லை. இவ்வியக்கத்தின் பரிணாம வளர்ச்சியையும், பிரபாகரனின் ஆளுமையையும் ஆராயும் போது, வண்முறையின் விதைகளையும், அது வளர்ந்து வியாபித்த விதத்தையும் காணலாம்.
தமிழீள விடுதலை இயக்கங்களில் ஆரம்ப காலத்தில் முக்கிய உறுப்பினராக இருந்த கனேச ஐயர், பிரபாகரனின் பங்கை பற்றி இவ்வாறு கூறுகிறார்,"(ஈழப் போராளிகள்) இயக்கமானது பிரபாகரனது விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார் . உண்ண உணவும் , உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார் . இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை . இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார்". பிரபாகரனின் குணத்தை பற்றி இன்னொரு இடத்தில் குறிப்பிடும் போது "இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்லை. சினிமா கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக இருந்தது . அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார் . இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்தித்தது கிடையாது . எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்தித்தது கிடையாது".
பிரபாகரனின் குணசீல சித்திரத்தை நம்மால் யூகிக்க முடிகிறது. தான் வைத்த இலக்கை அடைய அர்ப்பணத்தோடு செயல்படும் ஆற்றல், அதனோடு கூட ஒரு ஒற்றை பரிமாணமான ஆளுமையாகவும் தோன்றுகிறார். வேறு ரசனைகளே இல்லாமல், இராணுவம், இராணுவ உத்திகள், பேரொழுங்கு உள்ள இராணுவங்களை கட்டியெழுப்பும் தலைவர்கள் ( பொதுவாக இரண்டாம் யுத்த ஜெர்மானிய படை) மீது ஈர்ப்புடைய இளைஞர்களை எல்லாத் தலைமுறைகளிலும் பார்க்கலாம். அப்படிபட்டவராகவே பிரபாகரன் எனக்கு தென்படுகிறார்.
இயக்கத்தின் ஆரம்பக் கொலைகள் நடக்கும் போது பிரபாகரன் சொல்லும் சொற்றொடராக கனேச ஐயர் இதனை குறிப்பிடுகிறார், 'கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும்'. எனக்கு இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது தோன்றிய எண்ணம், பிரபாகரனின் மனதில் அரசியல் கொலை என்பது போராளி இயக்கங்கள் சில அரசியல் அவசியங்களுக்காக செய்யும் செயலாக இல்லாமல், தனிப்பட்ட மனிதனின் மனதைத் திடப்படுத்தக் கூடிய ஒழுக்க செயலாக மாறுகிறது என்பதே. கொலை என்பது, சமூகக் கட்டுப்பாடுகளினால் தடை (social taboo) செய்யப்பட்ட, மிகவும் எச்சரிக்கையும் விழிப்புணர்வுடன் அணுகும் செயலில் இருந்து, தனி மனித உணர்ச்சிகளின் ஒரு சாதாரணமான விடையமாக மாறிவிடுகிறது. இலங்கை கலவரத்தில் கொடூர வண்முறை செயல்களில் தனி மனித உணர்ச்சிகளினால் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு நிறுவன அங்கீகாரமும், தார்மீக அந்தஸ்தும் பிரபாகரன் என்ற அளுமையின் கீழ் கட்டமைக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் தான் முழு பொலிவுடன் காணமுடிகிறது. இயக்கமும் அதன் தலைவருக்கும் கேள்வியே கேட்காத சுய பலியீடு செய்யும் தியாகத்தை எதிர்பார்ப்பதிலும், மாறுயோசனை உள்ள யாவரும் துரோகிகளாக பார்க்கப்படுவதிலும், இயக்கத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையை புனிதமயமாக்குவதிலும் (எ.கா - காதலிப்பவர்களுக்கு ஆரம்ப காலத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டது), விடுதலை புலி இயக்கம் ஒரு வழிபாடு மறபாக (cult) உருவெடுத்தது. அப்படி உருவெடுத்ததின் காரணம் பிரபாகரனின் மனதின் அசாதாரண செயல்பாடே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போக்கு வெளியுலகத்து அரசியலினால் நிர்ணயிக்கபடாமல், அதன் அகத் தர்க்கங்களினால்(internal logic) நிச்சயிக்கப்பட்டன.
பென் பேவின்க் ( Ben Bavinck) என்ற டச்சு மிஷனரி 54 வருடங்கள் இலங்கையின் தமிழ் பகுதிகளில் மக்களுக்கு தன்னலமற்றமாக தொண்டாற்றியவர். இரண்டாம் உலக போரின் கோரத்தை தன் கண்ணூடாக பார்த்த இவர், ஐரோப்பாவில் பாசிச சக்திகளுக்கு எதிரான போரட்டத்தில் தன் சொந்த பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலமையிலும் பங்கேற்றவர். அவர் 1950களில் முதல் சாமானிய தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்தமையாலும், மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர் பண்புடைய அந்நிய நாட்டு மனிதர் என்ற வகையிலும் அவர் எழுதிய நாட்குறிப்புகள் மிகவும் முக்கியமானது. பொதுவாகவே வண்முறையை வெறுத்து, மற்றவர்களைப் பற்றி நல்லதையே யோசிக்கும் மனிதரான அவர் கூட புலிகள் இயக்கத்தின் செய்கைகளை குறித்து எரிச்சலடைகிறார். இப்பிரச்சினைக்கு பிரபாகரனின் அழிவைத் தவிர வேறு வழி இல்லை என வண்முறையை ஆட்சேபிக்காத நிலைக்கு தள்ளப்படுகிறார்.
1978ம் ஆண்டில் இலங்கையின் தேசிய விமான சேவையின் ஒரே ஆவ்ரோ (Avro) விமானத்தை புலிகள் வெடி வைத்து தகர்த்தனர். இதன் பிரதிபலிப்பாக எல்லோர் கவனமும் விடுதலைப் புலிகள் இயக்கம் மேல் பாய்ந்தது. இந்நிகழ்வின் திட்டமிடும் குழுவில் இருந்த கனேச ஐயர் அதன் பிண்ணனியில் நடந்ததைப் பற்றி விவரிப்பது ஆரம்ப காலத்து இயக்க உறுப்பினர்களின் எண்ணப்போக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. விமானத்தில் நேரக்குண்டை எப்போது வெடிப்பது என்ற கேள்வி எழும்போது அதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்ற அக்கறை யாருக்கும் எழவில்லை. ஆனால் அக்குழுவில் ராகவன் என்ற போராளி அப்பாவி மக்களின் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று உறுதியாக வாதிட்டத்தால், யாவரும் இறங்கிய பின்னர் வெடிக்கும்படி நேரக்குண்டு அமைக்கப்பட்டது. இயக்கத்தில் சர்வாதிகார போக்கு இறுக்கமாக நிலைகொள்ளுவதற்கு முன்னால் இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள் இருந்தன.
மைக்கல், பற்குணராஜா என்ற இருவர் பிரபாகரனால் கொல்லப்பட்டனர். அவர்கள் இயக்கத்திற்கு எதிராக செயல்படாத நிலையில், தகுந்த காரணமில்லாமல் சர்வாதிகரமாக செய்யப்பட்ட செயல்களாக பலரால் இவை கருதப்பட்டது . வெறும் பயத்தினாலும், சந்தேகத்தினாலும் செய்யப்பட்ட இக்கொலைகளை பற்றி சுய விமர்சனத்தோடு, தவறுகளை சரி செய்யும் வண்ணம் இயக்கம் கடந்து முன் செல்ல வேண்டும் என கனேச ஐயர் கேட்டுகொள்கிறார். பிரபாகரன் தான் செய்ததில் தவறு இல்லை என்று ஆணித்தரமாக பதிலளிக்கிறார். இயக்கத்தின் பாதுகாப்புக்காக செய்ததாக கூறும் பிரபாகரன், அது தவறு என்றால் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று தன்னை நியாயப் படுத்தி கொள்கிறார். கனேச ஐயரின் எடுத்துைரத்தலில் இவ்வாறான மூர்க்கத்தனமான நியாயப்படுத்தல்களுக்கு எதிராக தன்னால் ஒன்றும் பேசமுடியவில்லை என்று கூறுகிறார்.
தன் நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் அசையாத, பன்முகத்தன்மையை ஏற்கும் மனோவியல் இல்லாத மனிதன்; நாளடைவில் விடுதலைப் புலி இயக்கத்தின் ஒரே சர்வாதிகாரியான தலைவராகும் போது ஏற்படும் சோக எதிர்வினைகளை நாம் பிற்காலத்தில் கண்களால் கண்டோம். விடுதலைப் புலி இயக்கம் இறுக்கமான, மாறு யோசனைகளை ஏற்காத இயக்கமாக உருமாறுயதின் முக்கிய விளைவு என்று முறிந்த பனை ஆசிரியர்கள் கூறுவது, படித்த நடுத்தர இளைஞர்கள் இயக்கத்தில் சேர தயங்கினார்கள். தொடக்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களும் நாளடைவில் விட்டு சென்றார்கள். இப்படி விட்டு சென்றவர்களில் என் நினைவுக்கு வருபவர்கள் ராகவன், கனேச ஐயர், ரஜனியின் அக்காளான நிர்மலா, "Tamil Tigress" என்ற நாவலை எழுதிய நிரோமி டி ஸொய்சா (Niromi De Soyza). இவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் தங்கள் அனுபவங்களை எழுதியவர்கள். ஒரு பிரச்சினையை பல் வேறு கோணங்களில் பார்த்து சிந்திக்க வல்லவர்கள். இதன் மற்றொரு பக்க விளைவு, மனோபாவத்திலே வண்முறை குணம் உள்ளவர்களுக்கு பெரும் அதிகாரம் இயக்கத்திலும், சமுதாயத்திலும் கிடைத்தது.
விடுதலைப் புலிகளின் ஒவ்வொறு பொறுப்பற்ற, மனிதாபிமானமற்ற செயல்களையும் நான் இங்கு எழுத விரும்பவில்லை. அவற்றைப் பற்றி பல மனதை சோகமாக்கும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
கேள்வி: வண்முறை இல்லாமல் சுமூகமாக தமிழர்களாலும், சிங்களர்களாலும் இலங்கையில் வாழ்ந்திருக்க முடியுமா ?. பெரும்பான்மை சமூகத்தினர் இனவாத உணர்ச்சிகளால் வண்முறை செயலில் ஈடுபடும் போது சிறுபான்மையினர் எவ்வாறு தங்களை பாதுகாக்க முடியும்?.
பதில்: இதனை பற்றி பல அரசியல் சிந்தனையாளர்கள் எழுத முற்பட்டுள்ளார்கள். நான் இதை பற்றி எழுதுவதெல்லாம் கருத்தளவான (hypothetical) விளக்கங்கள் தான். நிதர்சனமோ, விளக்கின் தீயை நோக்கி பறந்து மாய்ந்து கொள்ளும் ஈசல்களை போல், மக்கள் தமக்கே புரியாத சூழலின் கைப்பாவைகளாக, வெறுப்பு நிரம்பிய நரகத்தை நோக்கி நகர்ந்து மாய்ந்தனர். இந்த அகோர வரலாறு சமூக சிந்தனை உடைய யாவருக்கும் ஒரு பணிவினைத் தரவேண்டும்.
இந்த அறிமுகத்துடன் எனக்கு தோன்றிய எண்ணங்களை இங்கு வைக்கின்றேன். ஜனநாயகம், மனித உரிமைகள், தேசிய அரசுகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இயற்கையாகவே தோன்றியவை. இதற்கு பல்வேறு காரணங்களை சமூகவியலாளர்கள் கூறினாலும் என் புரிதலின் படி அதற்கு காரணம் அவை அதிக பொறுப்பாண்மை சமுதாயங்கள் (high trust societies).மூன்றாம் உலக நாடுகளிலோ இக்கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்நிலை நம்மில் ஒரு பிளவை உருவாக்குகிறது. மேற்கத்திய நெறிகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்முடைய யதார்த்த பின்தங்கிய சமுதாயத்தின் அரசியல் வாழ்வுக்குமான பெரும் பிரிவை நம் மனதால் ஏற்க முடியாமல் ஒரு முரண்பாட்டுடன் வாழ்கிறோம். இது நம் அரசியலை குழப்பத்திற்குள் தள்ளுகிறது. இலங்கை பிரச்சனை எழுப்பும் அவசர கேள்வி "குறைந்த பொறுப்பாண்மை சமுதாயங்கள் (low trust societies) எவ்வாறு நவீன உலகத்தை எதிர் கொள்ள வேண்டும் ?".
குறைந்த பொறுப்பாண்மை சமுதாயங்களில்(low trust societies) பொதுவாக வெளிப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமைகள் மீரல் போன்றவைகள் இலங்கையிலும் காணப்பட்டன. பல மதங்கள், மற்றும் இனங்கள் சேர்ந்து வாழ்வது ஒரு கூடுதல் சிக்கலை இந்த பிரச்சினை உள்ள சூழலில் உருவாக்கியது. இலங்கையின் அண்மை வரலாற்றில் சிங்கள பேரினவாத கருத்துகள் ஒரு சாராரிடம் இருந்தாலும், சிங்கள சமுதாயத்தின் ஆதிக்க கருத்தாக, வரலாறு ரீதியாக இருக்கவில்லை. சிங்கள சமுதாயம் வர்க்க ரீதியாக மற்றும் இதர வித்தியாசங்களால் பிளவு பட்டு இருந்தது. படித்த மேல் வர்க்க சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருந்த உறவும், ஒற்றுமையும் அவரவர் சமூகத்திற்குள் அவர்களுக்கு இல்லை. ஜனநாயக இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. மாறாக சிங்கள மேட்டிமைவாத கொள்கையை ஒரு வலிமையான அழுத்த புள்ளியாய் பல்வேறு அரசியல் அமைப்புகள் பயன்படுத்தின. அதன் இறுதி விளைவு யாதொரு அரசாங்கமும் சிங்கள மேலாண்மை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இலங்கை அரசும் சிங்கள சாயத்தை எடுத்தது. இதன் விளைவு, சிங்களர் அல்லாத அடையாளங்களை கொண்ட இன, மத மக்கள் தங்களை இரண்டாம் தர குடிகளாக உணர்ந்தார்கள். வண்முறை வெடிப்பதற்கு ஏற்ற பகமை சூழல் இவ்வாறு உறுவாயிற்று.
உதாரணத்திற்கு, இலங்கையின் பன்முகத்தன்மைக்கு எதிராக சிங்கள பேரினவாதம் நடத்திய முதல் தாக்குதல் என்று கூறுவோமானால் அரசாங்க அலுவலக மொழியாக சிங்களத்தை 1956ம் ஆண்டு அறிவிப்பு செய்ததை சொல்லலாம். இதனை சிங்கள மக்கள் தமிழர்களை ஓரங்கட்டும் செயலாக பார்க்க முடியுமா?. மேற்கத்திய நாடுகளில் இவ்வாறு ஒரு நடவடிக்கையை அரசு எடுத்தால், அதற்கு வேறு அர்த்தம் இல்லை என்பது என் நம்பிக்கை. ஆனால் இலங்கையில் அதே அளவுகோலை பயன்படுத்தலாமா?. மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளும் , பொதுவான மதிப்புகளும் இல்லாத சிங்கள சமுதாயத்தில் ஒரு வலிமையான அழுத்தக் குழு அரசியலை தங்களுக்கு சாதகமாக திருப்பியமையால் அது முழு சிங்கள சமுதாயத்தின் கூட்டு விருப்பத்தின் வெளிப்பாடு என்று கருத முடியுமா?. ஏனென்றால் மூன்றாம் உலக நாடுகளில் சமுதாயம் என்ற அடையாளமே திரவத்தன்மையும் ( fluid), கற்பனை நிறைந்ததாய் இருக்கிறது. நாளடைவில் தமிழ் மொழிக்கும் அரசாங்க அலுவலக மொழியாக அந்தஸ்து கிடைத்தது. இதனால் சிங்கள பேரினவாத உணர்வு அழிந்தது என்று அர்த்தம் இல்லை. 1950 களின் அரசியலில் முக்கிய தலைப்பாக இருந்த இந்த காரியம் 1970,80 களில் இல்லை.
1956'ம் ஆண்டில் சிங்களம் மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப் பட்டபோது அதனை எதிர்த்து தேசிய தமிழ் கட்சிகள் அமைதியான "சத்யாகிரகா" ( Satyagraha) போராட்டத்தை நடத்தினார்கள். ஜனநாயக முறையில் அமைதியாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை சிங்கள கும்பல்கள் தாக்கினர். போராட்டத்தில் கலந்தவர்களை தாக்கியது மட்டும் இல்லாமல் கொழும்பு நகரில் வசித்த அப்பாவி தமிழர்களின் வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டன, தெருக்களில் வேலை நிமித்தமாக நடந்தவர்கள் இரக்கமில்லாமல் அடிக்கப்பட்டனர். பொது அமைதியை பாதுகாக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்த்து நின்றது. வண்முறை கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படவில்லை. 1983'ம் ஆண்டு இதனை விட பல மடங்கு அதிக வெறியோடு தமிழர்கள் தாக்கப்பட்டனர். இத்தகைய மகா வண்முறையை நடத்தியவர்கள் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படவில்லை. அரசியல் தலைவர்களாக அப்போது இருந்தவர்கள் கண்டனம் சொல்லவில்லை. பலர் நியாயப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தோடு பெரும்பான்மையான தமிழர்களுக்கு இலங்கை என்பது பல்மத, பல்லின நாடு என்று இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்தது . என்னுடைய உறவினர்கள் பலர் இச்சமையத்தில் தான் எங்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களுடைய ஏகமனதான கருத்து - தமிழர்கள் வாழ்வதற்கான இடம் இல்லை இலங்கை.
தமிழர்களாகிய நாம் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை மட்டும் கேள்விப்பட்டாலும் அது ஒரு பகுதியே. 1950'களுக்கு முன்னர் நடந்த கலவரங்கள் யாவும் மற்ற சிறுபாண்மையினரான முஸ்லீம்கள், கிருத்தவர்கள், மலையாளிகளுக்கு எதிராக நடந்தவை. முல்லிவாய்க்காலில் புலிகளின் அழிவுக்கு பின்னர் சிங்களர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இனக் கலவரங்கள் நடைபெற்றது. இக்கலவரங்களை தவிர்த்து சிங்களர்களுக்கு மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) என்ற இடதுசாரி இயக்கத்தினால் நடத்தப்பட்ட உள்நாட்டு கலகத்தில் 40,000க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் உயிரிழந்தனர். இவை எழுப்பும் கேள்வி பெரும்பாண்மை சிங்கள சமூகத்தின் ஒழுங்கீனமும், செயலிழந்த (dysfunctional) நிலமையும் தான் கலகங்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறதா?. செயலிழந்த சமூகம் அதன் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளும் மரியாதையான போர்வை தான் சிங்கள தேசியமா?.
"இலங்கையை எப்படி காண்பது" என்ற வழி காட்டி புத்தகத்தை 1914'ம் ஆண்டு பெல்லா வூல்ஃப் ( Bella Woolf) என்ற ஆங்கில பெண்மனி எழுதினார்கள். நீன்ட நாள் தங்கிய அனுபவத்தின் பின் எழுதப்பட்ட அப்புத்தகத்தில் இலங்கையின் முக்கிய இனக் குழுக்களை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் "தமிழ் கூலியாள் பற்றி இதனை வழங்க வேண்டும். அவனை சிங்களனோடு ஒப்பிடுகையில் சட்டத்தை கடைபிடிப்பவனாக, சமாதமானம் உடையவனாக காணப்படுகிறான். சிங்களர்களிடம் நுனியில் இருக்கும் கோபம் கத்தி கொலையாக மாறுவதற்கு அப்பால் கிராம வாழ்க்கையின் அடி நீரோட்டமாக ஒரு வண்மம் இருக்கிறது ". இது ஒரு இனக் குழு முழுவதையும் ஓரே அச்சு வடிவில் தரிப்பதாக ஆட்சேபிக்கலாம். ஆனால் கொழும்பில் நடந்த இனக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான சாமானியர்கள் சூறையாடுவதற்கும், கொலை செய்வதற்கும் கனபொழுதில் ஆயத்தம் அடைவதற்கு ஒரு விளக்கத்தை சமூகவியலாளர்கள கொடுத்தே ஆக வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்பில்லாமலும், தன்னலமாகவும் பேசி, நடந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினரான தமிழர்கள் கொழும்பு போன்ற நகரங்களில் சந்தித்த சூழலை ஒரு போதும் நாம் அவமதிப்பு செய்யலாகாது. முன்னர் கூறியது போல் இதனால் இலங்கையின் அரசியல்வாதிகளும், சமூகமும் ஒரே எண்ணத்தை உடையவர்கள் என்றோ வண்முறையை அங்கீகரிப்பவர்கள் என்றோ நிலைநாட்டுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. மாறாக இலங்கையின் அதிபர்களாக இருந்த சந்திரிகா குமாரதுங்கா ( Chandrika Kumaratunga), ரனில் விக்கிரமசிங்கே (Ranil Wikramesinge) போன்றவர்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கு பெருமனது உடையவர்களாகவும், வெறுப்பரசியலில் நம்பாதவர்களும், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய முனைபவர்களாகவும் தான் தென்படுகிறார்கள். ஆனால் சிங்கள சமுதாயம் ஒரு நிலையற்ற (volatile),செயலிளந்த (dysfunctional) , வண்முறை எத்தருணத்திலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் சூழலில், சிங்களர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலை தர இயலாது. நம்பிக்கை தரக் கூடியது என்பது சட்டத்தின் அரசாட்சியை நிலை நாட்டுவதற்கான உள்ளார்ந்த வலிமை இலங்கை சமுதாயத்திற்கு இருப்பது. துரதிட்டவசமாக இலங்கையின் வரலாற்றில் அந்த குணத்தை நம்மால் காண இயலவில்லை.
இறுதியாக என்னுடைய எண்ணம், சில வினாக்களுக்கு விடையே இல்லாதது போல், சில சமையங்களில் சமாதானமும், அமைதியும் நம்முடைய முயற்சிகளால் சாத்தியமாகாது. இலங்கை விடுதலை அடையும் போது மக்களிடையே நல்லிணக்கமும் அமைதியும் நிலவும் என்பது காற்றில் எழுதப்பட்ட நம்பிக்கை தான்.
கேள்வி.: இனியும் இலங்கையின் வரலாற்றில் இனக் கலவரங்கள் தொடருமா ?
பதில்: என்னுடைய நம்பிக்கை உலகமயமாக்குதலும், தகவல் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் தேசிய அரசுகளுக்கும் மக்களிடையே இருந்த உறவின் இயல்பை முற்றிலும் மாற்றிவிட்டது. 20'ஆம் நுற்றாண்டில் தேசிய அரசுகள் பெற்றிருந்த அந்தஸ்தையும், ஆக்கிரமித்திருந்த வலிமையையும் இச்சமூக மாற்றங்களினால் பெரிதளவும் இழந்துவிட்டன. அதனால் இனக் கலவரங்கள் பெரிதாக எழுவதற்கு சாத்தியம் இல்லை. தமிழினி தன் புத்தகத்தில் எழுதும் ஒரு சம்பவம், கலவரங்கள் காலத்தின் மாற்றங்களால் தங்கள் முக்கியத்துவத்தை இழந்ததற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது. விதுஷா என்கிற பெண் தளபதி 1980களில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவள். 2007ஆம் ஆண்டு அவள் தமிழினியிடம் பேசும் போது விரக்தியாக சொல்கிறாள் "எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்பிடி ஒரு வாழ்க்கை ? உலகம் எங்கேயோ போயிட்டுது , நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளேயும் சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருக்கிறம்.". உலக மாற்றங்கள் தன்னுடைய செயல்களை பயனற்றவை ஆக்குகிறது என்பதை விதுஷாவால் உணர முடிகிறது. 20'ம் நுற்றாண்டில் இடத்துக்காக பல இலட்சம் பேர் சண்டையிட்டு மாண்டனர் என்று கூறினால் அதனை புரிவதே 21'ம் நுற்றாண்டு இளைஞனுக்கு கடினமானதாக இருக்கும்.
முடிவு