Tuesday, 26 April 2022

இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும் எழுத்துகளும் - பாகம் 1

முன்னுரை

                தமிழ்நாட்டில் 1970,80 களில் பிறந்து வளர்ந்த பலருக்கு, இலங்கையில் தொடர்ந்து நடந்த வன்முறை, நமது பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே  இருந்தது.  இலங்கையில் நடந்த வன்முறையின் பிரதிபலிப்பு, தமிழ் நாளிதல்கள்,  அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சுகள், சுவரொட்டிகள் மூலம் தமிழ் நாட்டு மக்களிடம் தொடர்ந்த ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியது. இலங்கை மோதல்கள் பற்றி பெரிதளவு நான் படித்த பள்ளியிலோ, பொது இடங்களிலோ பேசப்படாவிட்டாலும், தமிழ் நாளிதல்களில் வரும் தமிழ் விடுதலை இயக்கங்களின் வெற்றிகளும், சிங்கள படைகளின் தோல்விகளும் ஒருவித குதுகலத்தை பலர் மனதில் ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. 

                ஆனால் நாம் இலங்கை கலவரத்தை பற்றி அறிந்தது ஒரு எளிமையான, நேர் கதையே. அதனை சுருக்க சொல்லுவோமானால், சிங்கள பெரும்பான்மை இனவாத வெறியின் தாக்குதலுக்கு சிறுபாண்மை தமிழர்கள் ஆளானார்கள். இதற்கு சாட்சி தான் அந்நாட்களில் செய்திதாள்களில் வந்த மனதை கலங்க வைக்கும்  கோர புகைபடங்கள். விடுதலை புலிகள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழர்கள் யாவரும் பெருமிதம் அடையும் வகையில் தைரியமும், வீரத்துடன் போரிட்டு, தமிழ் மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி ஒரு  தலைநிமிர்வையும் அளித்தார்கள்.  

                நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுலை புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலால் பலியாகும்  மட்டும், மேலே விவரிக்கப்பட்ட இந்த ஒற்றை பரிமாண நோக்கே தமிழகத்தில் தலைதூக்கி இருந்தது. அது மட்டுமல்லாது, முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் தமிழீழ வேட்கை  அணையும் வரை, இலங்கையில் நடந்த நிகழ்வுகள், மோதல்கள், சமூக நிலமை பற்றி, ஒரு ஆழமான புரிதலை ஏற்படுத்தும் எழுத்துகள், தமிழக பொதுத்தளத்தில் பேசப்படும்படியாக எழவில்லை. நான் அறிந்ததில் இதற்கு ஒரே விதிவிலக்கு, "முறிந்த பனை" என்று UTHR-J( University Teachers for Human Rights-Jaffna)  கொண்டு வந்த அறிக்கைகளின் தொகுப்பு மட்டுமே. அனால் இது பொதுத் தளத்தில் பிரபலம் அடையவில்லை.

            அனால் கடந்த பத்தாண்டுகளில் நிலமை மாறியுள்ளது. பல புத்தகங்கள் இலங்கையின் அண்மை கால நிகழ்வுகளும், சூழலும் பற்றிய விஸ்தார விவரிப்பை அளிக்கும் விதமாக வந்துள்ளது. நான் இந்த மறு ஆய்வை மூன்று பெண்களின் வாழ்க்கை,  அவர்கள் எழதிய கட்டுரைகள், சுயசரிதைகளை அடிப்படையாக வைத்து எழுத முற்படுகிறேன். இந்த மூன்று பெண்களும் தமிழர்கள் என்ற அடையாளத்திற்கும் மேலாக , தனித்துவம் வாய்ந்தவர்களாக, வேறுபட்ட அரசியல் அனுகுமுறைகளை கொண்டவர்களாக இருந்துள்ளனர். இவர்களுடைய வாழ்வையும், அனுபவங்களையும் வாசிக்கும் போது, கூடவே அவர்கள் வாழந்த சமுதாயத்தின் அரசியலை பற்றிய புரிதலும் நமக்கு  வெளியாகிறது.

            முதல் பெண்மனி, உலகளவில் இலங்கை பிரச்சனை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்த பெயரான ரஜனி திரனகாமா. புலிகள்  இயக்கத்தில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னர் விடுதலை புலிகளால் கொல்லப்படுகிறார். அடுத்த எழுத்தாளர், விடுதலை புலி இயக்கத்தின் பெண் போராளிகளின் அரசியல் அணி தலைவராக இருந்த தமிழினி. புலிகள் இயக்கத்தில் முக்கிய பொருப்பிலிருந்தமையால், இவர் எழுதிய "கூர் வாழின் நிழலில்" என்ற புத்தகம் இலங்கை தமிழர் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கடைசியாக தேர்ந்தெடுத்த எழுத்தாளர் வெற்றிச்செல்வி. விடுதலைப் புலி இயக்கத்தில் பதினெட்டு வருடங்களாக செயல்பட்டு, விடுதலை புலிகளின் தோல்விக்கு பின் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட புனர் வாழ்வு மையத்தில் தங்கி பின் விடுதலையானார்.  தன் புனர் வாழ்வு மைய அனுபவத்தை "ஆறிப்போன காயங்களின் வலி" என்ற தலைப்பிலும்,  ஏழுக்கும் மேற்பட்ட பிற நாவல்களையும் எழுதியுள்ளார். 

            இலங்கை சமூக சூழலும், அங்கு நடைபெற்ற போராட்டங்களையும் பற்றி மேலும் அறியவும், இந்த மதிப்புரையை எழுதுவதற்காகவும், வேறு சில ஆவணங்கள், எழுத்துகளையும்  வாசித்தேன். அவற்றில் முக்கியமானவை கனேசன் ஐயர் எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்". Ben Bavinck என்ற Dutch பாதிரியாரின் நாட்குறிப்பு, ஒரு மனிதநேயமிக்க வெளி சமூகத்து மனிதன், இலங்கை போராட்டத்தை எப்படி உள்ளுணர்ந்தார் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. கடைசியாக "முறிந்த பனை"  அறிக்கையின் அவதானிப்புகளும், அதில் எழுப்பியிருந்த கேள்விகளும் இந்த ஆய்விற்கு உதவியது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home