நீல. பத்மானபன் எழுத்துக்கள்
நீல. பத்மானபன் எழுத்துக்கள்
குமரி மாவட்டத்தில் இருந்து சாஹித்ய விருதை பெற்ற இதிஹாச எழுத்தாளர் நீல. பத்மநாபன். அவர் தமிழில் இதுவரை இருபது நாவல்கள் எழுதியிருந்தாலும் நான் அவருடைய சிறந்த நாவல்களாக கருதப்படும் தலைமுறைகள் மற்றும் பள்ளிகொண்டபுரம் ஆகிய இரண்டையும் தான் வாசித்து இருக்கிறேன். அதனால் இவற்றை பற்றிய என் கருத்துக்களை இந்த உரையில் நான் எழுதுகிறேன். இந்த இரண்டு புத்தகங்களிலும் சில பொதுவான அம்சங்கள் அடித்தளத்தில் ஓடி கொண்டு இருப்பதாக எனக்கு பட்டது . அவை ஒரு மரபு சார்ந்த சமுதாயத்தில் வாழ்கிற ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் கால போக்கின் மாற்றங்களால் ஏற்படும் சோதனைகள் .அதனை அவன் சமாளிக்கும் விதம். அவனை சுற்றி உள்ள அவன் குடும்பம், நண்பர்கள், பரிச்சயமானவர்களின் மனப்பாங்குகளும் நடத்தைகளும். இப்படி ஒரு சாமானிய மனிதனை மைய கதாபாத்திரமாக வைத்து ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை சித்திரம் செய்கிறார். நான் இதுவரை வாசித்த புத்தகங்களில் ஒரு சமூக மக்களின் ஆளுமைகளையும் , அவர்கள் உறவுகளையும், கலாச்சார பழக்கங்களை இவ்வளவு அசாத்தியமான நல்ல முறையில் ஓர் எழுத்தாளர் வர்ணித்ததை நான் பார்த்ததில்லை.
தலைமுறைகள் நாவலை எழுத்தாளர், தான் பிறந்த இரணியல் செட்டியார் என்ற வேளாள பிரிவு மக்களின் சமூகத்தை மையமாய் வைத்து எழுதியிருக்கிறார். இந்த கதையை சுருக்கத்தில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு விதவையான மூத்த கிழவி, தன் மகன், மருமகள், பேரன், பேத்திகள் என கூட்டு குடும்பமாக இரணியல் கிழக்கு தெருவில் வசித்து வருகிறார். அவர்களின் எதிர்புற வீட்டில் கிழவியின் கூடப்பிறந்த அண்ணன் தன்னுடைய இரண்டு மனைவி, மக்களுடன் வாழ்கிறார். மூன்று தலைமுறைகளை கொண்ட இந்த நீடித்த குடும்பத்தின் ஒரே பேரனான திரவியம் என்ற திரவியின் கண்ணோட்டத்தில் இருந்து இந்த புனைகதை எழுதப்பட்டிருக்கிறது. திரவியின் பதினைந்து முதல் இருபத்தி ஐந்து வயதின் இடையில் அவன் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தான் இந்த நாவலின் மூல தளம். ஆச்சாரமாக , சமுதாய நியதிகளை முழு ஒழுங்கோடு கடைபிடித்து வாழ்ந்து வரும் இந்த குடும்பத்தில், எதிர்ப்பாராத ஒரு திருப்புமுனையாக திரவியின் நேரடி அக்காளான நாகுவின் கல்யாணமும், அதன் கலைவும் நிகழ்கிறது. ஒரு பாரம்பரியக் சமூகத்தில் இத்தகைய ஒரு சம்பவமும், அதன் அதிர்வுகளும், அது பரிணமிக்கும் விதமும் தான் இந்த நாவலின் மத்திய அம்சம். இதுவே மைய கதையாக இருந்தாலும் கூடவே வரும் துணை கதாப்பாத்திரங்களின் கதைகளும் சொல்லப்படுகிறது. சுருக்கச் சொல்லப்போனால் இது ஒரு சமூகத்தின் கதை. இந்த கதையை பல கோணங்களில், நிலைகளில் ஒரு வாசகரோ, திறனாய்வாளரோ அணுகலாம். இதனை ஒரு நேர்முகமான கதை நோக்கில் வாசிக்கலாம், அல்லது 1968அம் ஆண்டில் வந்த முதல் பதிப்பில் ஆசிரியர் எழுதின முன்னுரையில் கூறுகிற வகையில், வரலாற்று விளக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் , விழாக்கள், விளையாட்டுகள், வாழையடி வாழையாய் வந்தடைந்த கதைகள், பாடல்கள், பழமொழிகள், பிராந்திய கொச்சை வார்த்தைகள், பேச்சு வழக்குகள், இத்யாதி இத்யாதி என்று ஒரு சமுதாயத்தின் நாடி துடிப்புகளை கைப்பற்றுகிற வரலாற்றின் உறைந்த கணமாக , ஒரு சமூகவியல் நோட்டத்தோடு இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் அணுகலாம். நாவல் வெளிவந்த வந்த போது முகவுரை எழுதியிருந்த பேராசிரியர் ஜேசுதாசன் இதை ஒரு கதை நோக்கிலும், சமீப காலத்தில்(2013) வந்த காலச்சுவடின் வெளியீட்டில் முன்னுரை எழுதிய வண்ணநிலவன், பெருவாரியான ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு எழுதியதாக எனக்கு பட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டில், இரண்டு தலைமுறைகள் அப்பாற்பட்டுள்ள நான் எவ்வாறு இந்த மதிப்புரையை எழுத அணுக வேண்டும் என்று எண்ணுகையில் , மானசீகமாய் இந்தக் கதையில் ஈர்ப்பு கொடுத்த காரியம் என்ன என்று யோசித்தேன் . இரண்டு விடையங்கள் எனக்கு தோன்றியது. ஒன்று இந்த கதையில் உள்ள பாத்திரங்களின் ஆளுமைகள் . அவர்களுடைய வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தி கொள்கிற, கொள்ளாமல் போகிற தார்மீக கோட்பாடுகள், அவர்களுடைய பிரக்ஞய்க்கு அப்பாற்பட்ட உந்துதல்கள், அவர்களுடைய மரபுகளுக்கும்
தலைமுறைகள் நாவலை எழுத்தாளர், தான் பிறந்த இரணியல் செட்டியார் என்ற வேளாள பிரிவு மக்களின் சமூகத்தை மையமாய் வைத்து எழுதியிருக்கிறார். இந்த கதையை சுருக்கத்தில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு விதவையான மூத்த கிழவி, தன் மகன், மருமகள், பேரன், பேத்திகள் என கூட்டு குடும்பமாக இரணியல் கிழக்கு தெருவில் வசித்து வருகிறார். அவர்களின் எதிர்புற வீட்டில் கிழவியின் கூடப்பிறந்த அண்ணன் தன்னுடைய இரண்டு மனைவி, மக்களுடன் வாழ்கிறார். மூன்று தலைமுறைகளை கொண்ட இந்த நீடித்த குடும்பத்தின் ஒரே பேரனான திரவியம் என்ற திரவியின் கண்ணோட்டத்தில் இருந்து இந்த புனைகதை எழுதப்பட்டிருக்கிறது. திரவியின் பதினைந்து முதல் இருபத்தி ஐந்து வயதின் இடையில் அவன் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தான் இந்த நாவலின் மூல தளம். ஆச்சாரமாக , சமுதாய நியதிகளை முழு ஒழுங்கோடு கடைபிடித்து வாழ்ந்து வரும் இந்த குடும்பத்தில், எதிர்ப்பாராத ஒரு திருப்புமுனையாக திரவியின் நேரடி அக்காளான நாகுவின் கல்யாணமும், அதன் கலைவும் நிகழ்கிறது. ஒரு பாரம்பரியக் சமூகத்தில் இத்தகைய ஒரு சம்பவமும், அதன் அதிர்வுகளும், அது பரிணமிக்கும் விதமும் தான் இந்த நாவலின் மத்திய அம்சம். இதுவே மைய கதையாக இருந்தாலும் கூடவே வரும் துணை கதாப்பாத்திரங்களின் கதைகளும் சொல்லப்படுகிறது. சுருக்கச் சொல்லப்போனால் இது ஒரு சமூகத்தின் கதை. இந்த கதையை பல கோணங்களில், நிலைகளில் ஒரு வாசகரோ, திறனாய்வாளரோ அணுகலாம். இதனை ஒரு நேர்முகமான கதை நோக்கில் வாசிக்கலாம், அல்லது 1968அம் ஆண்டில் வந்த முதல் பதிப்பில் ஆசிரியர் எழுதின முன்னுரையில் கூறுகிற வகையில், வரலாற்று விளக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் , விழாக்கள், விளையாட்டுகள், வாழையடி வாழையாய் வந்தடைந்த கதைகள், பாடல்கள், பழமொழிகள், பிராந்திய கொச்சை வார்த்தைகள், பேச்சு வழக்குகள், இத்யாதி இத்யாதி என்று ஒரு சமுதாயத்தின் நாடி துடிப்புகளை கைப்பற்றுகிற வரலாற்றின் உறைந்த கணமாக , ஒரு சமூகவியல் நோட்டத்தோடு இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் அணுகலாம். நாவல் வெளிவந்த வந்த போது முகவுரை எழுதியிருந்த பேராசிரியர் ஜேசுதாசன் இதை ஒரு கதை நோக்கிலும், சமீப காலத்தில்(2013) வந்த காலச்சுவடின் வெளியீட்டில் முன்னுரை எழுதிய வண்ணநிலவன், பெருவாரியான ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு எழுதியதாக எனக்கு பட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டில், இரண்டு தலைமுறைகள் அப்பாற்பட்டுள்ள நான் எவ்வாறு இந்த மதிப்புரையை எழுத அணுக வேண்டும் என்று எண்ணுகையில் , மானசீகமாய் இந்தக் கதையில் ஈர்ப்பு கொடுத்த காரியம் என்ன என்று யோசித்தேன் . இரண்டு விடையங்கள் எனக்கு தோன்றியது. ஒன்று இந்த கதையில் உள்ள பாத்திரங்களின் ஆளுமைகள் . அவர்களுடைய வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தி கொள்கிற, கொள்ளாமல் போகிற தார்மீக கோட்பாடுகள், அவர்களுடைய பிரக்ஞய்க்கு அப்பாற்பட்ட உந்துதல்கள், அவர்களுடைய மரபுகளுக்கும்
இப்போதைய நவீன எதார்த்தங்களுக்கும் உள்ள தூரத்தினால் வரும் இறுக்கங்கள் என நாவலில் வர்ணிக்கப்படும் இந்த குணசாலிகளின் உருவம் காலம், சமூகம் இவற்றை எல்லாம் கடந்து ஆழமாய் நம்முடைய மனதில் பதிகிறது. இரண்டாவதாக எனக்கு தோன்றிய காரியம், இந்த கதாபாத்திரங்கள் வாழும் சாதிய சமுதாயம். சாதியின் நெடி இப்புத்தகத்தின் ஒவ்வொறு பக்கத்தில் இருந்தும் வியாபித்து எழுகிறது. ஆக இவ்விரண்டு பரிமாணங்களின் நோக்கில் இருந்து இவ்வாய்வை எழுதுகிறேன்.
திரவியின் அப்பா நாகரு பிள்ளை ஒரு எச்சரிக்கையும் கவனமுமான ஒரு மனிதர். அவருக்கில்லை வீண் பேச்சுகளும், மடத்துணிவுகளும். தன் மகளை வீணாக பழிசுமத்தி தள்ளி வைக்கும் வக்கிரமான தருணத்தில் கூட கடினமான வார்த்தைகளையோ, கலகங்களை ஏற்படுத்தவோ இல்லாமல் தனது சோர்வுகளையும் , கவலைகளையும் தன்னுடைய மௌனத்திலும், உழைப்பிலும் தான் வெளிப்படுத்துகிறார். அவருடைய அம்மா உண்ணாமலை ஆச்சி தன் இளம் வயதில் விதவையாகி தன் மகனை தனியாக வளர்த்து, தன் சமூகம் அமைத்திருக்கும் கோட்பாடுகளையும் ஆச்சாரங்களையும் சிறிதளவும் மாறாமல் கடைபிடிப்பவர். இப்போதய தற்காலத்து உலகுக்கும் தன் கற்பனையில் உள்ள கடந்த காலத்திற்கும் இடையேயான வெகு தொலைவை எண்ணி ஆதங்கப்பட்டு பெறுமூச்சுடன் "எல்லாம் நானோ, நானல்லவோண்ணு திரியு. பின்னே இப்படி மட்டுமா நடக்கும்?. இன்னமும் நடக்கும் ..! உம் கலிகாலமல்லா கலிகாலம்". இதைவிட்டால் தன்னுடைய அப்பாவின் மேதகைமையையும் வீட்டின் வளத்தையும் சிலாகித்து "திருவாங்கோட்டில் எங்க ஐயா மூத்த பிள்ளை மூக்காண்டி செட்டீயாருண்ணா அழுத பிள்ளை வாயயை மூடும். ஊரிலே கல்யாணம் ஆனாலும் சரி, கருமாதி ஆனாலும் சரி , எங்க வீட்டுக்கு ரட்டைப் பங்கை தந்தருணும்.பின்னே மூத்த பிள்ளை பட்டமுண்ணா சும்மாவா ? ". பாட்டியின் அண்ணன் கூனாங்கனி பாட்டா தன் இளம்வயதில் பெற்றோருக்கு வேதனை தரும் பொறுப்பற்ற காமுகனாக வாழ்ந்து, இப்போது தன் முதிர்வயதில் மகிழ்ச்சியே இல்லாத இல்லற வாழ்க்கையை ஒரு விரக்தியுடன் சகித்து கொண்டு செல்கிறார். இறுதியில் தன் பிள்ளைகளும் பெஞ்சாதிமாறும் ஒரு கரிசனையின்றி தன்னை தனிமையாக விட்டு செல்லும் தருணத்தில் , தன் தங்கை உண்ணாமலை ஆச்சி அவரின் நிலமையை கண்டு பரிதவிக்கும் போது "நம் புள்ளைங்ககிட்டெ நாம் காட்டும் சிநேகத்தை, நம்ம ஐயா-அம்மா கிட்டேயிருந்து நாம அனுபவிச்சாச்சுட்டீ!. நாம சின்ன புள்ளையா இருக்கப் பட்ட சமயம் அனுபவிச்சுத்தீத்த பாசத்தைத்தான் நம்ம புள்ளைகளுக்கு நாம திருப்பிக்கொடுத்தோம். அதோடெ கணக்குத் தீந்தாச்சு!. நாம இனி , அவர்களுட்டே இருந்து இனியென்ன எதிர்பார்க்க இருக்கு ? நான் எதிர்பார்க்கல்லே.. எனக்கு எமாற்றமும் இல்லே! உம் , நம்ம ஐயா எங்கிட்டே எதிர்பார்த்திருந்தால் , ஏமாந்திருப்பார்... அவ்வளவு தான்!".
இந்த முந்தையவர்களுக்கு எதிர் தரப்பாக வகைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், திரவியின் அக்காளாகிய நாகுவின் கணவரான சிவானந்த பெருமாள் என்ற செவந்த பெருமாளும் அவருடைய அம்மாவாகிய பாப்பாத்தி அத்தையும். அவர்கள் இருவரையும் யாதொரும் மீட்கும் குணம் இல்லாத தயவற்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். பாப்பாத்தி அத்தை தான் கட்டிய கணவன் தொற்று வியாதியான குக்ஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டதும் அவரை வீட்டை விட்டே துரத்திவிடிகிறாள். தன்னுடைய மகனின் கல்யாணத்தை பார்க்க விரும்புவதாக கூறும் தன் ஐயாவின் கோரிக்கையை செவந்த பெருமாள் அத்தான் நிராகரிக்கும் போது சொல்லுவது "அவரெ இங்கணெ கண்டு போகப்படாது, சொல்லிப்போட்டேன். இங்கெ வந்தாருண்ணா ...". பாப்பாத்தி அத்தையும் "அந்த தொட்டாரொட்டி சொகக்கேட்டையும் கொண்டு அந்த களிச்சுப்பட்ட மனுசன் இங்கே வரப்படாதுண்ணா வரப்படாதுதான். ஆமா..". இந்த புத்தகத்தின் பக்கங்களில் காணும் கடினமான சமூக நிலபரப்பும், அதில் வசிக்கும் வக்கிரமான மனிதர்களின் ஓர் உதாரணமாக இவர்களை காண்கிறோம்.
இன்னும் பல்வேறு பாத்திரங்களின் சித்தரிப்பை நாம் காணலாம். கூனாங்கனி பாட்டாவின் மகள் நீலாப்புள்ளை சித்தி தன் கணவனுக்கு வைசூரி வந்தவுடன் தன் அம்மா பொணமு ஆச்சிக்கு ஆள் அனுப்ப, "இவனுக்குப் பண்டுவம் பாத்து ஆயுசறாமெ சாவுதுக்கா எனக்க அருமாந்த புள்ளையை கெட்டிகொடுத்தேன்.?" என்று தன் சம்பந்தியிடம் சண்டைக்கு நின்று தன் மகளையும், பேரனையும் கூட்டி கொண்டு வருகிறாள். தன் கணவன் இறந்த பிறகு துட்டி கேட்பதற்கு கூட செல்லவில்லை. பின்னர் தன் காதலனாகிய கோராமியுடன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓடிவிடுகிறாள்.
இன்னோரு மகளான தாயிசித்தியின் குடும்பம் ஒரு விசித்திர குடும்பம். தன் பெஞ்சாதிக்கும் மாமியாருக்கும் நடக்கும் சண்டைகளில் கோலப்ப பிள்ளை தன் அம்மாவை வசை பாடுவதுடன் சில வேளைகளில் கையையும் நீட்டுகிறார்.
இவர்களில் ஒரு வித்தியாசமான மனிதன் என்று காட்டப்படுபவர் கீழ் சாதி பனையேரியான செல்லன் நாடார். ஒரு தனித்துவமும் கெளரவுமும் உள்ள மனிதராக விஸ்தரிக்கப்படுகிறார். பனை மரத்திலிருந்து விழுந்து முதுகு உடைந்து கட்டிலில் கிடையாக கிடப்பினும் தன் மனைவி வீட்டில் இருந்து ஒரு சகாயமும் எதிர்பார்க்க மறுக்கிறார்.
இப்புத்தகத்தை முதலில் கூறியது போல, ஒரு சமூக ஆய்வு கோணத்தில் இது நிற்கும் வரலாற்றின் பிண்ணனி பற்றி எனக்கு தோன்றிய கருத்துகளை இப்போது எழுதுகிறேன். இதை வாசிக்கும் போது எனக்கு வந்த எண்ணம், இவர்கள் தங்களுக்கே அறியாமல் ஒரு பெறும் வரையறைக்குள் கட்டுப்பட்டு இயங்கும் மக்கள். அவர்களுடைய நாள் தோறும் வாழ்க்கையானாலும் சரி, சமூக வாழ்வின் நடத்தையிலோ ஒரு மனிதனின் இயற்கையான ஓட்டத்தை காணமுடிவதில்லை. வெளிப்படையாக நெருக்கத்துடன் பேசி நடந்தாலும், நடைமுறையில் நெருக்கடி ஏற்படும் போது சாதி சமூகத்தின் ஆழமற்ற நம்பகரமற்ற தன்மை பளீச்சென்று அப்பட்டமாக தெரிகிறது. அவர்களுடைய எல்லா செயல்களிலும் ஒரு பயமும், கணக்கீட்டு பார்த்து அணுகும் குணத்தையும் நாம் இந்த கதையில் பார்க்கலாம். இருபத்தியொன்றாம் நுற்றான்டில் வாழும் இளம் தலைமுறை இளைஞன் இப்புத்தகத்தில் உள்ள சம்பிரதாயங்கள், பழக்கங்கள் பற்றி வாசிப்பானாகில் ஒரு திகைப்பும், அன்னியமான உணர்வே ஏற்படும். ஆனால் இதில் விவரிக்கப்பட்ட சமூக வழக்கங்கள் ஒரு புனைவு இல்லை, நிஜத்தின் ஆவணமே. நாகு அக்காளை பற்றிய திரவியின் நினைவு "எப்பம் பாத்தாதாலும் அந்த ஸாப்பு முறியின் இருட்டு மூலையில் தான் இருக்கும் அது.ஆம்புளையொ ஆரும் இல்லாத சமயத்தில் அந்த முறியை விட்டு அடுக்களை, தொட்டிப்பக்கம் போலாமேத் தவிர நடுத் திண்ணைக்குக்கூட வரப்படாது. கொமரிப்பிள்ளையல்லவா !வெளீலெ வெட்டத்திலே போக முடியுமா ?. உம், எப்படித்தான் நேரம் போகுமோ! கொஞ்சம் முற்றத்தில் எத்திப் பாத்தா போரும்,
"ஏட்டி, எனுத்துக்குட்டீ அங்கணே எத்திப்பாக்கே? கொமரிப் பொண்ணுண்ணா மூலையிலே அடங்கி இரிக்கணும்"ண்ணு அம்மை சத்தம் போடுவாள்". இந்த சோக உருவு நாம் வாசித்து முடிந்தும் மனதில் நிரந்தரமாக நிலைத்து தங்குகிறது.
சகுனம் பார்க்காமல் அவர்கள் வாழ்வில் ஒரு நிகழ்வும் நடப்பது இல்லை. உண்ணாமலை ஆச்சி காலை எழுந்தவுடன் பார்ப்பது தென்னை மரத்தை தான். "தெங்கு கற்பக விருட்சமல்லவா?. காலம்பரக் கண் விழிக்க அதைவிட ஐசுவரியமானது வேறெ என்னத்தெ இருக்க முடியும்". சிறுவனான திரவி கூட பள்ளிக்கு செல்ல வீட்டின் முற்றத்திலிருந்து தெருவில் வரும் போது நல்ல சகுனம் (குமரி பேச்சுவழக்கில் எதுர்ப்பு) பார்க்காமல் போவதில்லை.
செவந்த பெருமாள் அத்தான் திருமாங்கல்யத்தை நாகு அக்காளின் கழுத்தில் கட்டும் தருணத்தில் நிகழும் சம்பிரதாயம், இச்சமுதாயத்தில் அடித்தளத்தில் எப்போதும் இருக்கும் போட்டிகள், பாசாங்குகளை உணர்த்தும் உருவகமாக இருக்கிறது. பாப்பாத்தி அத்தை தன்னுடைய கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் தள்ளி மறைச்சவாறு மணவடையில் ஏறுகிறாள். பின்னர் திரவி தன் பாட்டியிடம் காரணத்தை கேட்க, அவள் "தாலியும், தாலியும் பாக்கப்படாது. பாத்தா ஒண்ணு ஒயரும், இனியோண்ணு தாருமாம்".
இந்த சமூகத்தின் கலாச்சாரம் ஒரு வெற்றிடத்தில் இருந்து உருவாகவில்லை. தமிழ் நாட்டில் நெல் பயிரிடும் ஈர நிலங்களில் "குடியானவன்" என்று ஒரு நாகரீக செல்வாக்கை அடைந்த சமூகத்தின் கதை தான் இது. வேளான்மையும், அதில் ஈடுபடுபவர்களின் செல்வாக்கை ஆறாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட திருக்குரள் முதல் பன்னிரண்டு,பதிமூன்று நூற்றாண்டில் எழுதிய ஆத்திசூடி தொட்டு பல தமிழ் இலக்கியங்களில் காணலாம்.
திருக்குரள்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல்ப வர்.
தொழுதுண்டு பின்செல்ப வர்.
ஆத்திசூடி
--- நெல் பயிர் விளை,
--- பூமி திருத்தி உண்
சமூக ஆய்வாளர்களின் கருத்து, வேளாளர்களின் ("குடியானவன்") வாழ்க்கை முறை, நெல் பயிரிடப்பட்ட இடங்களின் அப்பால் உள்ள "காடு" என்று கருதப்பட்ட நிலங்களில் வாழ்ந்த மக்களின் நெரிக்கு எதிர்மறையாக வளர்ந்த ஒன்று என்பதே. இதற்கும் மேல் என் மனதில் தோன்றிய யூகங்கள் இவை. நெல் பயிரிடும் ஈர நிலங்களில் வாழும் மக்கள் கூட்டத்தில் வேளாளர் ஒரு பகுதியே. இங்கு நிலவிய இந்து அரசியல் முறையின் படி, பிராமணர்களும், மன்னர்களும் தான் அதிகார உச்சியில் இருந்தனர். வேளாளர்கள் என்ற மக்களையும், அவர்களுடைய கலாச்சாரத்தையும், வடிவமைப்பதில் பெரும் பங்கினை ஆற்றுபவர்கள், இந்து அரசாட்சியின் மூலதனமாக கருதப்படும் பிராமணர்களும், அரசர்களும் தான். வேளாளர்களின் சமுதாயப் படிநிலையை நிர்ணையிப்பதே பிராமணர்களின் அடுத்தப்படியாக அவர்கள் வாழும் நெருங்கிய நிலையே. பிராமணர்கள் உருவாக்கிய சடங்காச்சார படிநிலைகளும், அவர்களால் புனிதமாக்கப்பட்ட கோயில்களும் தான் "காட்டின்" அபகரிப்பில் இருந்து "குடியானவனின்" வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. இந்து அரசாட்சிக்கு உள்ளார்ந்த இயல்பான சாதி முறை தான், உற்பத்தி உபரியை உருவாக்கி ஈர நிலங்களில் வாழும் வெள்ளாளர்களுக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்துகிறது. இந்த இடைநிலையில் இருப்பதால் தானோ என்னவோ இப்புத்தகத்தில் நாம் காணும் இம்மக்களின் சமூக
வரம்புகளுக்கு காரணமாக இருக்கமோ என்று தோன்றுகிறது.
இரண்டாவது நாவலான பள்ளிகொண்டபுரம், ஆசிரியர் தன் வேலை நிமித்தமாக வாழ்ந்த திருவனந்தப்புரம் நகரமும், அங்கே வாழும் வேற்று மொழி பேசும் சமூகத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார். தலைமுறைகள் நாவலை வாசிக்கும் போது ஒரு சுய சரிதையின் சித்திரம் என்ற உணர்வு நமக்குள் தோன்றுமேயானால், பள்ளிகொண்டபுரம் நாவலை வாசித்த பின் நமக்கு ஏற்படுவது ஆசிரியரின் கூர்நோக்கு பார்வையின் திறமை மேல் ஒர் வியப்பு. நாவலில் வர்ணித்துள்ள இடங்கள், மக்கள், சடங்குகள் எல்லாம் உயிர்பெற்று நம் கண்களுக்கு முன்னால் வலம்வரும் அளவுக்கு ஆசிரியர் ஆச்சரியமாக எழுதுகிறார். இந்த நாவல், அனந்தன் நாயர் என்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அனந்தன் நாயரின் தனிப்பட்ட கதையை சுருக்க கூறுவோமாயின், கார்த்தியாயினி என்ற பேரழகியை பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு மணம் செய்கிறார். மகாராஜாவின் காரியாலயத்தில் வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் சுகபோகமான இல்லர வாழ்க்கையின் முதல் தீவினையாக அவருக்கு ஏற்படும் காசநோய். எதார்த்த வாழ்க்கையை தொடர முடியாத நிலையில் ஒருவித தாழ்ச்சியோடு இருக்கும் நிலமையில் தான் குரூர காமுகனான விக்கிரமன் தம்பி தாஸில்தாரின் கண்கள் கார்த்தியாயினி மேல் விழுகிறது. தன் குடும்ப வாழ்க்கையில், அதிகார பலமும், பதவி மேட்டுமையும் உடைய தம்பி குறுக்கிடும் போது அனந்தன் நாயரால் அவனுடைய நகர்வுகளை முறியடிக்க இயலவில்லை. அந்த மனப்புண் காயங்களால் வரும் தாழ்ச்சி மனப்பான்மை குடும்பத்தில் பெரும் சண்டைகளும், சச்சரவுகளையும் உருவாக்குகிறது. இறுதியாக கார்த்தியாயினி தன்னையும்,இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு தம்பியிடம் ஓடிப்போகிறாள்.அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்த நாளிலும் அதன் அடுத்த நாளிலும் அவருக்கு வரும் பழைய நினைவூட்டல்களும், அவ்விறண்டு நாட்களில் அவருடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த புனைவு கதை.
அனந்தன் நாயர் தன் ஐம்பதாவது பிறந்த நாளன்று வைகரை தோன்றும் முன் உள்ள இருட்டில் ஸ்ரீபத்மனாபன் கோயிலில் பள்ளி கொண்டிருக்கும் பத்மநாப சுவாமியை தரிசிக்க நடந்து போவதில் இருந்து தான் கதை ஆரம்பமாகிறது. அப்படி அவர் கடந்து செல்லும் பிரபல இடங்களின் வரலாறும், பழைய ஜாபகங்களும் அவர் மனத்திரையில் ஒன்றுவிட்டு ஒன்றாக வருகிறது. "பிரியப்பட்ட நாட்டுக்காரரே ..." என்று அரசியல் தலைவர்கள் முழங்கும் பழவங்காடி மைதானம். பரசுராமன் சமுத்திரத்தில் கோடாரியை எறிந்து உருவாக்கிய கேரளம். அனந்தன் காட்டு மகாத்மியம் என்ற பத்மநாப சுவாமி கோயில் ஸ்தலபுராணத்தின் பாக்களில், காடாக ஒருபோது இருந்த இவ்விடத்தில் பெருமாள் பள்ளி கொண்டதின் பின் உள்ள வரலாற்றை பற்றிய விவரிப்பு. தான் முப்பது வருடங்களாக வேலை செய்த காரியாலையம். காரியாலையம் மூலமாக கோயிலை நிர்வகித்து தனக்கு படியளந்த திருவோனம் திருநாள் மகாராஜா. தன் இளவயதில் மகாராஜா தன் பரிவாரங்களுடன் பங்கெடுக்கும் சீவேலி ஊர்வலங்களை பார்த்த தருணங்கள். சிறு வயதில் தன் அம்மா கோயில் பற்றி கூறிய சுவராஸ்யமான விடயங்கள். இப்படி தன் மனதில் போட்டி போட்டுக் கொண்டு இந்த மனப்படிமங்கள் வந்து சென்றிருக்கையில், தன்னையும் தன் பிள்ளைகளையும் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கைவிட்டு சென்ற கார்த்தியாயினி பற்றிய ஜாபகங்கள், தனக்குள்ளே தான் ஏற்படுத்திகொண்ட கட்டுப்பாடுகளையும் எல்லாம் மீறி தலைதூக்கி ஒரு இழப்பின் சங்கடத்தை உருவாக்காமல் இல்லை.
ஒரு கடந்த உழியின் உணர்வுகள், அழகியல்களை இந்த நினைவுகூர்தல்களில் பார்க்கலாம். தரகன் சங்கரப்பிள்ளை, அப்பாவிடம் கார்த்தியாயினி வீட்டில் இருந்து வரன் கேட்கும் போது " ஸ்ரீபத்மனாப ஸ்வாமி சேத்திர ஊட்டுப்புரை காரியஸ்தன் ஆதிசேஷய்யரைப் பற்றி நான் சொல்லாண்டாம் ..! பொண்ணை அனந்தன் நாயர் போயி ஒருக்கப் பாக்கட்டும், பிறகு தெரியும் கார்த்தியாயினிக்க அருமையை!. அசல் ரம்பையல்லவா ரம்பை..! காரணவரே.. ஒட்டு மாங்காய்க்கு இருக்கும் ருசியே அலாதி தானே.. அதுவும் நாடன் ஒட்டா? உயர்ந்த ஜாதி ஒட்டு..!". கார்த்தியாயினியின் அம்மா ஜகதம்மா ஒரு தரவாட்டு நாயர், அப்பா பிராமணர். கார்த்தியாயினியை பெண் பார்த்து வந்த அனந்தன் நாயரிடம் தன் அம்மா அபிப்ராயம் கேட்க "அம்மே.. தயவு செய்து அப்பாட்டச் சொல்லு , எனக்கு இந்தப் பெண் வேண்டாம்!". ஆலயத்தில் வைத்து அராதனை செய்ய வேண்டிய அழகைப் பள்ளியறையில் கொண்டு வந்து சிறை செய்வது முறையாகுமா?.
அந்த பழைய கடந்து போன உலகின் பகட்டும், காம்பீரியமும் கோயிலின் ஊட்டுப்புரையைப் பார்க்கும் போது தன் மாமனார் ஆதிசேஷய்யரின் நினைவோடு வருகிறது. "இங்கே கிடைக்கும் இருநேர பந்திச் சாப்பாட்டை நம்பி ஒரு காலத்தில் எத்தனை எத்தனை பிராம்மணக் குடும்பங்கள் வாழ்ந்தன. அப்போ இந்த இடம் இப்படியா தூங்கி வழியும்?.இந்நேரத்தில் இங்கே தன் மாமனார் அதிசேஷைய்யர் எவ்வளவு எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்!பரபரப்பாக-அமர்க்களமாக இருக்கும்! சாப்பாட்டுக்காக இங்கே ஆயிரக்கணக்கில் பெரிய பெரிய தலைவாழையிலைகள்
வரிசை வரிசையாகப் போடப்பட்டிருக்கும். அனைத்தும் முழுக்க முழுக்கத் தன் மாமனார் ஆதிசேஷைய்யர் தலைமையில்தானே நடைபெறும்.. எனவே ராத்திரி பூராவும் அவர் இங்கேதான் வாசம். உம்..அவர் ஆள்தான் எப்படி இருப்பார்! கட்டுக்கட்டுன்னு இரும்பிலெ செய்த உடம்பு. தார் பாய்ச்சி உடுத்தியிருக்கும் தோள் துண்டும், அந்தப் பூணூலும், உச்சிக் குடுமியும், கையில் எப்போதும் பளபளக்கும் வெள்ளிப்பொடி டப்பியும்..!உம்.. அவர் இங்கே மேற்பார்வை பார்த்துக்கொண்டே வருகையில், பெரிய பெரிய வார்ப்புகளில் கொதித்துக்கொண்டிருக்கும் பதார்த்தங்களில் அகப்பையை முக்கி ஒரு நிமிஷ நேரம் மூக்கருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்ப்பார், அவ்வளவுதான்.. பிறகு 'ஏய் வைத்தீ.. ஒரு கரண்டி உப்பு கொண்டு வாரும்' என்றோ, இல்லாவிட்டால், 'தேங்காய்பால் கொஞ்சம் விடணும்' என்றோ ஒரு சத்தம் போட்டுவிட்டால் போதும், இந்தக் கல்மண்டபம் எல்லாம் கிடுகிடுங்கும். சமையல் மேதாவிகளான வைத்தி, சகஸ்ரநாமய்யர், பட்டாபி எல்லோரும் வெடவெடாண்ணு நடுநடுங்கிக் கொண்டு ஓடி வருவார்கள். அவருக்கு அவ்வளவு நிச்சயம்..!". புலன்களை தொடும் நெருங்கிய வர்ணனைக்கு இன்னொறு உதாரணம், கார்த்தியாயினியை பிடவிட (நாயர் முறை கல்யாணம்) செய்தபின் முதல் முறை கோயிலிலுக்கு போனபோது "மையிட்டு மினுமினுத்த அவள் விழிகளில், ஒரு குறும்புத் தனம் துடித்துநிற்பது தெரிகிறது. அதோடு நாண உணர்ச்சியின் ஒரு பரவச பாவம்.. அவள் விழிகள் சைகை காட்டிய அந்தத் திக்கில் திரும்பிப் பார்த்தபோதுதான்.. வாழ்க்கையில் முதல் முறையாக இந்தச் சிற்பம் தன் கண்களில் விழுந்தது. சிற்பமா? ஏதோ பெயர் மறைந்துபோன ஒரு கலைஞன் கல்லில் வடித்தெடுத்த ஒரு காரிகையின் திருக்காவியம், பிறந்தமேனியில்..!". இப்படி எத்தனையோ அழகிய விவரிப்புகளை இந்நாவலில் காணலாம்.
அனந்தன் நாயர், கார்த்தியாயினிடம் இருந்து பிரிந்து, பதினைந்து வருடம் ஆகி தன் ஐம்பதாவது வயதில், அவரிடத்தில் நாம் காண்பது ஒரு தாங்கமுடியாத அயர்வும், விரக்தியும். தன் மகள் அக்கரையோடு, ஏன் வழக்கமில்லாமல் அதிகாலையில் கோயில் போனதற்கு காரணம் கேட்கவும், அவரும் விரக்தியுடன் "மோளே.. இண்ணைக்கோடு பாவி நான் இந்த லோகத்தில் ஜன்மெடுத்து அம்பது வருஷம் ஆயிட்டதுடி..!". அந்த இழப்பின் சோர்வு ஒர் இருண்ட மேகம் போல் அவரின் ஆளுமையை போர்த்தி பொதிகிறது. "தடத்தை மீறி வாழ்க்கைச் சகடம் நீங்கையில், இம்மாதிரி வேதனைகள், ஆரம்ப உறுத்தல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.. அதை அனுபவித்துத் தீர்க்கத்தான் வேண்டும் என்று மூளை ஒருவிதத்தில் சொல்கிறதே ஆனாலும், தன் இதயம் அவைகளை அங்கீகரிக்காமல் ஏன் இப்படிக் கசிந்துருகி மாளவேண்டும்..?" . இரவு தன்னந்தனியாக நடந்து வருகையில், அமைதியான சாலையோரத்தில் உள்ள வீடுகளில் தூங்கும் மனிதர்களை நினைத்து ஒரு பொறாமையோடு கூடிய அங்கலாய்ப்பு. "உம்.. எது எப்படியானாலும், இந்தச் சின்னச் சின்ன வீடுகளில் எல்லாம் எவ்வளவு அமைதியான வாழ்க்கை நிலவுகிறது.. தன் தாம்பத்திய வாழ்க்கையில் மட்டும் தானே இப்படியோரு கண்டம்.. அதனால்..தன் வாழ்க்கைபப் பாதையே சமாதானமே அடியோடு செத்துப் போய்விட்டதே..! தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நேரக் காரணம் ?". இதன் கூடவே தன்னை பற்றி ஒர் சின்ன பெருமிதம் "அந்த மாதிரி ஒரு வைராக்கிய சித்தம் தனக்கும் இல்லை யென்று கூறமுடியுமா? இழுக்கும் திசைகளில் எல்லாம் நீங்கி விடும் உணர்ச்சிகள் உள்ள ஒரு மனிதனாகத் தான் இருந்திருந்தால், இந்தப் பதினைந்து ஆண்டு காலமாக, மனப் போர்கள் எப்படியும் போகட்டும், செயலாற்றில் இப்படியொரு திடத்தன்மையோடு தீவிரமாக நின்று தன்னால் சமாளித்திருக்க முடியுமா? ".
இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில், அனந்தன் நாயர், மகள் மாதவிக்குட்டி, மகன் பிராபகரன் நாயர் மூவரும் உரையாடுவது தான் இந்நாவல் உச்சநிலை அடையும் இடம் என்று எண்ணலாம். பதினைைந்து ஆண்டுகளாக தன்னந்தனியாக வளர்த்த மகன், இனி நான் என் அம்மாவிடம் போய் வாழ்வதாக தன் தீர்மானத்தை சொல்வதோடு, அனந்தன் நாயர் மேலும் தன் குற்றச்சாட்டை வைக்கிறான் "பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு இன்னொருத்தர் கூட இறங்கிப்போகும் அளவுக்கு பர்த்தாவால் வஞ்சிக்கப் பட்டவர் என்ற ஒரு அனுதாபமே எனக்கு அம்மா மீது தோணியது..!”. இதை கூட தாங்கி, ஒரு பதில் அளிக்க முடியக்கூடிய அனந்தன் நாயருக்கு அவனுடைய அடுத்த வாக்கியம் தான் அவரை இடி இடித்தது போல் ஸ்தம்பிக்க செய்தது."தன்மானம், மண்ணாங்கட்டி,அப்படி இப்படீண்ணு வாழ்வைப் பாழடித்து உலகத்தில் ஒன்றையும் அனுபவிக்காமல் செத்து மண்ணாவதில், எந்த சாமர்த்தியமும் இருப்பதாக எனக்குத் தோணவில்லை..!.ஒரு ஜன்மம் முழுதையும் அப்பாவைப் போல் அநியாயமாய்ப் பாழடிச்சுக்க மாட்டேன் நான்.. அதில் எந்தத் தியாகமோ, லட்சியமோ இருப்பதாக எனக்குத் தோணவில்லை. அது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதுதான் என் கொள்கை..!”. ஒரு தகப்பனின் கடமையை சரிவர செய்வதே தன் வாழ்க்கையின் குறிகோள் என வாழ்ந்து வந்த அனந்தன் நாயருக்கு மகன் சொன்ன நிராகரிப்பு தான், கையில் பிடித்திருந்த ஒரே கயிற்றை வெட்டி ஒரு மீள முடியாத அதல பாதாளத்தில் விழும் உணர்ச்சியோடு கதை முடிகிறது.
இந்த இரண்டு கதைகளுமே நாடக வடிவத்திற்கு ஏற்றதாக அமையும் என்பது என் கணிப்பு. சில இடங்களில் நாடகத்துக்கே உரியதான மிகைப்படுத்துதல்களை பார்க்கலாம். நவீன நடப்பியல் எழுத்துகளின் அழகியலுக்கு அது மாறுபட்டதாக இருப்பதால் நம் ரசனைகளுக்கு அது உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். அனால் முன்னால் எழுதியப்படி இதில் வரும் பிரம்மாண்ட வர்ணனைகள் அதற்கு ஈடு செய்யும் என நம்புகிறேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home