இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும் எழுத்துகளும் - பாகம் 2
புத்தக ஆய்வு
ஈழ விடுதலை போராட்டத்தில், சக விடுதலை இயக்கங்களில் செயல்பட்ட போராளிகளை, விடுதலை புலி இயக்கம் அழித்தது யாவரும் அறிந்ததே. ஆயுதம் ஏந்தாமல், அரசியல் அல்லது அறிவு தளத்தில் புலிகளின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும், குறிப்பாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் பகுதியில் அனுமதிக்கவில்லை என்பதும் பொது அறிவு. அதற்காக அனேக அரசியல் கொலைகளை செய்ய அவர்கள் தயங்கவில்லை. 90'களில் விடுதலை புலிகளின் இயக்கத்திற்கு முரணான கருத்துகளை பொதுவெளியில் சொல்ல முடியாத நிலை தமிழ் மகானங்களில் நிலவியது. இந்த சூழ்நிலை உருவாவதற்கு முன்னால் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, ரஜனி திரனகாமாவின் படுகொலை. மனித உரிமைக்காக யாழ்பாண பல்கலை கழக ஆசிரியர்கள் (UTHR(J)) என்ற குழுவின் நான்கு பேர் கொண்ட நிறுவன உறுப்பினர்களில் ஒரே பெண் உறுப்பினர் ரஜனி திரனகாமா. யாழ்பாணத்தில் நடந்த வன்முறைகளையும், மனித உரிமை மீறல் சம்பவங்களையும், அரசியலையும் ஆவனப்படுத்துவதே குறிக்கோளாக வைத்து தொடங்கப்பட்ட குழு இது. ரஜனி தன் முப்பத்தைந்து வயதிலேயே மரித்ததால் தன்னைப் பற்றிய சுய சரிதையையோ, அதிக எழுத்துகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் எழுதிய ஒரே கட்டுரை எனக்கு தெரிந்த வரை "No more tears Sister". இது "முறிந்த பனை" என்ற ஆவணத் தொகுப்பில் ஒரு கட்டுரையாக வந்தது. அந்த கட்டுரை, இந்திய அமைதிப்படை, பெண்களுக்கு எதிராக செய்த அத்துமீறல்களை ஆவணப்படுத்தியதோடு, யாழ்ப்பாண சமூகத்தையும், பெண்களின் நிலமையையும் ஒரு மார்க்ஸிய நோக்கோடு கூர்ந்து ஆய்வு செய்கிறது. அதனை வாசிக்கும் எவருக்கும் ரஜனி பின்பற்றும் நிதானமான, அமைதியான எழுத்து நடை மனதில் பதிகிறது. அந்த கட்டுரையின் பின் ஒரு ஆழமான, விவேகமுள்ள மனதின் இயக்கத்தை நாம் காணலாம்.
ரஜனி திரனகாமாவை பற்றிய பெரும்பாலான தகவல்கள் நமக்கு கிடைப்பது மற்றவர்களின் நினைவுகூர்தல்கள் வழியாகவே. அதில் மிக முக்கியமானது, 2005'ம் ஆண்டில் ரஜனி கொலையுண்டு பதினாறு வருடங்களுக்கு பின் வந்த "No more tears Sister" என்ற ஆவணப் படம். ரஜனியின் ஆளுமையையும், அரசியல் சார்ந்த பரிணாம வளர்ச்சியையும் நாம் புரிவதற்கு அவளுடைய பிண்ணனி பற்றி அறிவது மிகவும் முக்கியம். ரஜனியின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், யாழ்ப்பான சமுதாயத்தில, அவர்கள் சார்ந்த சாதியான வேளாளர்கள், பல நூற்றாண்டுகளாக ஆதிக்க நிலையில் இருந்தவர்கள். அதுவும் அறிவு தளத்தில் மேலோங்கி திகழ்ந்த ரஜனி போன்றோரின் குடும்பங்கள் தான் கலாச்சார, சமூக உயரடுக்காக (elite) இலங்கை தமிழர்களால் கருதப்பட்டனர். பொதுவாக இந்த மேலடுக்கு மக்கள், இலங்கையில் இனச்சண்டைகள் ஆரம்பித்த போது, அரசியலில் ஈடுபடாமல் அகதிகளாக மேலை நாடுகளுக்கு செல்லவே விரும்பினர். ரஜனியின் உதாரணம், இதற்கு ஒரு விதிவிலக்காகவே இருக்கிறது. அதுவே ரஜனியின் அரசியல் வாழ்க்கை மேல் நமக்கு ஒர் ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது.
"No more tears Sister" என்ற ஆவணப் படத்தில், ரஜனியின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் இளவயதை பற்றி நினைவுகூருவதிலிருந்து ஒரு சித்திரத்தை நம்மால் தீட்ட முடிகிறது. ரஜனி தன் பள்ளி காலத்தில், கிருத்தவ வழிபாடு மற்றும் கிருத்தவ சபை பாடகக் குழு முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடுடன் எல்லோருடைய கண்களையும் கவரும் வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்துடன் செயல்படுகிறார். ரஜனியின், இந்த குணமான வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்தை, அவள் வாழ்க்கை முழுவதுமாக காணமுடிகிறது. இறுதியில் அவள் மரணத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. ரஜனியின் இந்த இயல்பான குணம் ஒரு பக்கம் நம்மை ஈர்க்க, இந்த கருத்துரையில் அவளுடைய அரசியல் பரிணாம வளர்ச்சியை பற்றி கவனம் செலுத்துகிறேன். ரஜனியுடன் மிக நெருக்கமாக இருந்த அவள் அக்காவான நிர்மலா கூறும் போது, கிருத்தவ போதனைகளின் தாக்கம் தங்கள் இளவயது கற்பனையை, சமூக நீதியும், ஈகைக்கும் கொண்டு சென்றது என குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இதே சமூக அக்கறை அவர்களை இடது சாரி அரசியலுக்கும் இழுத்து செல்கிறது. கல்லூரி நாட்களில், உலகளாவிய இடதுசாரி பிரச்சினைகள், புரட்சியவாதம், பெண்ணியவாதம் ஆகியவற்றில் மூழ்கின்றனர். பொதுவுடமை மேல் அவர்களுக்கு இருந்த ஈர்ப்பின் தீவிரத்தை அறிய , நிர்மலா அமேரிக்காவில் தன் படிப்பை முடித்து யாழ்ப்பானத்திற்கு வந்தவுடன், வகுப்புவாதம் இல்லாத பண்ணை ஆரம்பிப்பதற்காக நிலம் வாங்க முற்படுகிறாள். ரஜனி தன்னுடைய பாரம்பரிய குடும்பத்தில் ஒரு அதிர்வை உருவாக்கும் விதமாக, இனம், மதம், சமூக அந்தஸ்து எல்லாவற்றையும் கடந்து, தன் பெற்றோருக்கு அறவே விருப்பமில்லாத, சமூக அந்தஸ்தில் அவர்களுக்கு நிகரே இல்லாத, இடதுசாரி இயக்கத்தில் புரட்சியில் ஈடுபட்ட பெளத்த, சிங்கள இளைஞனை திருமணம் செய்கிறாள். இவ்வேளையில் தான் இலங்கையில் சிங்கள பேரினவாதம் தலையோங்குகிறது. நிர்மலா முதலிலும், பின்னர் மருத்துவ உதவி செய்வதற்காக ரஜனியும், விடுதலை புலி இயக்கத்தில் மெதுவாக இழுக்கப்படுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இயக்கத்தில் இருக்கும் சர்வாதிகார போக்கு, மனித உரிமை மீரல்கள், போராட்டத்தை முற்றிலும் இராணுவ கண்ணோட்டத்தில் அணுகுவது போன்ற காரணங்களால் அவர்களால் அதில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. ரஜனியின் இந்த கால பகுதியின் செயல்களும், சிந்தனைகளும் தான், நாம் திரும்பிப் பார்க்கும் போது, நமது மனதில் அழுத்தமாய் பதிகிற ஒன்றாய் இருக்கிறது. இனச்சண்டை இக்காலகட்டத்தில் தீவிரமடைகிற சூழலில், நடுத்தரவர்க்க யாழ்பாண மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அலைமோதி செல்ல முற்படுகையில், முனைவர் பட்டத்தை இங்கிலாந்தில் முடித்திருந்த ரஜனி தன் இரு சிறு வயது மகள்களையும் அழைத்து யாழ்பாணத்திற்கு வருகிறாள். அவளுடைய இந்த செயலானது பொதுவான யாழ் சமூகத்தின் சிந்தனைக்கு நேர் எதிரானது. இதனை ஆட்சேபித்தவர்களுக்கு அவளுடைய விடை "பல்லாயிரம் பிள்ளைகள் குண்டு வெடிப்புகள் மத்தியில் வாழ்கின்றனர். என் பிள்ளைகளும் அவர்களில் ஒன்றாகவே வாழ்வார்கள்". யாழ்பாணத்தில் அவளுக்கு ஆபத்து என்று வேற்று இடத்திற்கு செல்ல அறிவுரை கூறியவர்களுக்கு, அவளுடைய மறுக்கும் பதில் "என் மக்களின் இந்த துயர மிக்க நாட்களில், அவர்களுடன் நான் வாழாவிட்டால் என்னுடைய ஆன்மாவுக்கும், என்னுடைய மக்களின் ஆன்மாவுக்கும் நான் ஒரு பொய்யை இழைப்பதாக இருக்கும்". "என்னுடைய மக்கள், என்னுடைய மக்களின் போராட்டம்", இந்த சொற்றொடரையே இந்நாட்களில் அவள் எல்லோருக்கும் முன் முகம் சுழிக்காமல், யாவருக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறாள். இந்த நாட்களில் தான், சீர்குலைந்து போன யாழ்பாண பல்கலை மருத்தவ துறைக்கு ஒரு புத்துணர்வை கொண்டு வருகிறாள். வேலையில் இவ்வாறு கருத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல் புரியும் இந்த காலகட்டத்தில் தான் யாழ்பாண பல்கலை கழகத்தில் ஆயுதமேந்திய குழுக்களின் ஊடுருவல் அதிகமாகிறது. இந்திய அமைதி படையின் ஆளுகையின் கீழ் யாழ்பாணம் இருந்த இந்த காலகட்டத்தில், அவள் பல்கலைகழக மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் இந்திய இராணுவத்திற்கும் இடையே வரும் சிக்கல்களுக்கு நேரடியாக இராணுவ மேலதிகாரிகளை அணுகுகிறாள். இந்திய ராணுவ அத்துமீறல்களை சுட்டிகாட்டும் போது ஒரு நெருக்கடி நிலமையை இந்திய அதிகாரிகளுக்கு அவள் உருவாக்கினாலும், நாளடைவில் அவளுடைய உரக்கமான, வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்திற்கு, தானாகவே ஒரு மரியாதை ஏற்படுகிறது. ஆனால் மறையடக்கும் பாங்குள்ள (Secretive) அமைப்பாக செயல்படும் விடுதலை புலிகளுடனோ ஒரு அர்த்தமுள்ள ஈடுபாட்டை அவளால் ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய படைகளின் பிழைகளை தட்டி கேட்கும் அதே வேளையில், விடுதலை புலிகளின் அத்துமீறல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாள். இதில் உள்ள ஆபத்தை அவள் தெளிவாக உணர்கிறாள். தன் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தன் நண்பிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகையில் "ஒரு நாள் துப்பாக்கி ஒன்று என்னை மவுனமாக்கும். அதனை வைத்திருப்பவன் ஒரு புறத்தானாக இருக்கமாட்டான், இந்த சமூகத்தின் கருப்பையில் பிறந்த மகனாக இருப்பான் - அவனுடைய தாய் என் வரலாற்றை பகிர்ந்தவளாக இருப்பாள்". இவ்வளவு தெளிவாக தன் வாழ்க்கைக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்தும், இரு மகள்களின் தாயாகிய ரஜனி, தினசரி வாழ்வை எப்படி ஒரு ஆரவாரமின்றி நடத்தினாள் என்பது நமக்கு வியப்பையே அளிக்கிறது. ரஐனி தன் சாவை மட்டும் முன்கணிப்பு செய்யவில்லை, அரசியலை குறித்த தெளிவும், இதயத்தில் உள்ள தார்மீக உணர்வும் அவளை ஓர் தீர்க்கதரிசியாகவே ஆக்கியது. பெரும்பாலான தமிழர்கள், விடுதலை புலிகளின் குரூர வன்முறை செயல்களை நியாயப்படுத்தியோ, அல்லது பல்வேறு காரணங்களை காட்டி, கண்டும் காணாதவர்களை போல் நடந்து கொள்ளும் தருணத்தில், ரஜனியின் அவதானிப்பு வரிகள் இன்றும் நம்மை வியப்புற செய்கிறது. "புலிகளின் வரலாறு, அவர்களுடைய கோட்பாடு வெற்றிடம், அரசியல் படைப்பாற்றல் இல்லாமை, சகிப்பின்மை, வெறி பிடித்த அர்பணிப்பு அவர்கள் உடைப்படுவதற்கு இறுதி காரணமாக அமையும். பழம்பெரும் புலிகள் தங்கள் அழிவிற்கு சொல்லும் தொன்மைக்கதைகளில், அவர்களின் பலியாள்களின் இரத்தமும், கண்ணீரும் பூசப்பட்டிருக்கும். ஒரு புதிய புலி அதன் சாம்பலில் இருந்து மீண்டெழுந்து வராது".
ரஜனி, அரசியல் வண்முறைக்கும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக இருந்த அதே வேளையில், இந்த கருத்துரையில் எழுதப்படும் மற்ற இரு பெண்களின் வாழ்க்கை, விடுதலை புலிகளின் இயக்கத்தோடு பிண்ணி பிணைந்து இருந்துள்ளது. தமிழினியும், வெற்றிச்செல்வியும் விடுதலை புலிகள் இயக்கத்தில் 1990'களில், அதாவது ரஜனி கொலையுண்ட ஓரிரு வருடங்களில் சேர்ந்து, முல்லிவாய்க்காலின் இறுதி அழிவில் இலங்கை படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு மையயங்களில் சில காலம் தங்கி, அதன் பின்பு விடுவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில், உயர்ந்த பதவியாக கருதப்பட்ட அரசியல் பிரிவு தலைவியாக செயல்பட்ட தமிழினி, விடுதலை பெற்ற பின்பு தன் அனுபவங்களை "கூர்வாளின் நிழலில்" என்ற நூலில் வெளியிட்டார். அதன் வெளியீடு, இலங்கை சூழலை பின்பற்றியவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. தமிழினி தன்னுடைய பூர்வீகத்தை, பற்றி எழுதும் போது, ஒரு மிகவும் சாமானியமான, தந்தையை இழந்த, சிறு விவசாயம் செய்யும் கூட்டு குடும்பமாகவே விவரிக்கிறார். நம்மை அறியாமலேயே நம் மனது ரஜனியையும், தமிழினியையும் ஒப்பீடு செய்கிறது. இருவரும் வேளாளர் சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக கலாச்சார உலகம் இரு துருவங்கள் போன்று அப்பாற்பட்டது. தமிழினியின் குடும்பம், ரஜனியை போன்ற நவீன, தனிக் குடும்பம் இல்லை. அவளுடைய குடும்பத்தில் பள்ளிக் கல்வியை முடித்தவர் என்று எவரும் இல்லை. ரஜனி, யாழ்பாணத்தில் வாழ்ந்தாலும், சிறு வயது முதல் அவளுடைய உலகம், உலகளாவிய நடுத்தர வர்க்கத்திற்கே பொது அடையாளங்களான மேற்கத்திய இலக்கியம், சிந்தனை, இசை, ஆங்கில பேச்சு போன்றவற்றில் வியாபித்து இருந்தது. தமிழினி தன் இளம் வயதின் இனிமையான தருணங்கள் என்று தன் சொந்த வார்த்தைகளில் கூறும் போது "ஜல்ஜல் எனச் சலங்கை ஒலியெழுப்பும் இரட்டை எருதுகள் பிணைக்கப்பட்ட மாட்டு வண்டியில் வைக்கோல் பரவி அதற்குமேல் பாய் விரித்து அமர்ந்து கொண்டு குடும்பமாக கரடிப்போக்குச் சந்தியில் இருந்த சினிமா தியேட்டர்களான ஈஸ்வரன் அல்லது பராசக்திக்குப் போய், அம்மம்மாவுக்குப் பிடித்த சிவாஜி அல்லது எம்,ஜி.ஆர் படங்களைப் பாதிவரை பார்த்து வருவது".
வித்தியாசங்கள் ஒரு புறம் இருக்க, அவர்கள் மனப்பான்மையில் ஒரு முக்கிய ஒற்றுமை ஒன்றையும் காணமுடிகிறது. "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தின் முன்னுரையில், இப்புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தை சொல்லுகையில் "எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில் தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்". இதனை வாசிக்கும் போது, ரஜனி உபயோகிக்கும் "என் மக்கள்" என்ற வாக்கியம் நம் ஜாபகத்திற்கு வருகிறது. விடுதலை புலி இயக்கத்தில் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்வது, தன்னுடைய சமூகத்திற்கு தான் செய்யும் கடமை என மட்டுமின்றி, வரும் இளம் தலைமுறையின் சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று உறுதியாக நம்பினாள். இப்படிப்பட்ட பொறுப்புணர்வு இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் காணலாம்.
தனது பள்ளி பிராயத்தில் மேடைப் பேச்சு, கவிதை, பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்வுகளில் பங்குப்பெறும் தைரியமும், முனைப்பும் இருந்தாலும், கூடவே ஒரு கவனமும், எச்சரிக்கையையும் அவளிடத்தில் இருப்பதை புத்தகத்தை வாசிப்போருக்கு உணரமுடிகிறது. அவளுடைய இயல்பு என்று தன்னை பற்றி கூறும்போது, "உணர்ச்சியும், புத்தியும் குறிப்பிட்ட அளவு விகிதங்களில் கலந்ததாகவே முடிவுகள் இருக்கவேண்டும் எனக் கருதுவதுதான் என்னுடைய தனிப்பட்ட இயல்பு". தனக்குள்ள நிதர்சன போக்கையும், நிதானமான மனப்பான்மையையும் ஒருவித பெருமிதத்துடன் பார்த்த தமிழினிக்கு, தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் போது, எங்கே தவறு செய்தேன்,செய்தோம் என்ற கேள்வியே பூதகரமாக எழும்பி அவள் மனதை வாட்டுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும் எவருக்கும், தமிழினியின் இந்த விடையே இல்லாத துயரமான அங்கலாயிப்பை உணர முடிகிறது. இந்த புத்தகத்தில் உள்ள மிகவும் மனதை உருக்கும் நிகழ்வு, தமிழினி சரணடைந்த பின் அவளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வந்த இளம் சிங்கள மருத்துவருக்கும் அவளுக்கும் இடையே நடைபெறும் உரையாடல். இதனை என் வார்த்தைகளில் எழுதுவதை விட, இப்புத்தகத்தில் வரும் தமிழினியின் வார்த்தைகளிலே எழுதுகிறேன். "அந்த இளம் பெண் மருத்துவர் என்னிடம் கதைத்தார் "உயிர்களை கொல்லுறது பாவம். இந்த உலகம் எவ்வளவு அழகானது. நீ ஏன் இவ்வளவு நாளும் பயங்கரவாதியாக இருந்தாய். இனியெண்டாலும் உயிர்களை நேசித்து வாழப் பழகு" என்ற அவரது அறிவுரை எனது உள்ளத்தை மிகவும் பாதித்தது. நான் போராளியா? பயங்கரவாதியா?. என்னைப் போராளியக்கியதும் பயங்கரவாதியாக்கியதும் அடிப்படையில் எது என யோசித்தேன். அரசியல் தான். ஆயுதமே விடுதலையைப் பெற்றுத் தரும் என எமக்கு பாடம் புகட்டியதும் அரசியல் தான். ஆயுதமேந்தியதால் நீ ஒரு பயங்கரவாதி என முத்திரை குத்துவதும் அரசியல் தான். எனக்கும் இள வயதில் எத்தனை கனவுகள், கற்பனைகள், ஆசைகள் இருந்தன?. இன்னொரு உயிரை நேசிப்பவளாகவே சிறு வயதிலுருந்து நானும் வளர்க்கப்பட்டேன். எனது உயிரை கொடுத்து மக்களுடைய எதிர் காலத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தானே என்னை போராட்டத்தில் இணையச் செய்தது? அனால் விடுதலையின் பேரால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் உயிரிழப்புகளிக்கும் நானும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறேன். அதனை மறுப்பதோ மறைப்பதோ எனது மனச்சாட்சிக்கே நான் இழைக்கும் துரோகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்". தன் வாழ்க்கையில் எடுத்த தீர்வுகளை பற்றிய கேள்விகளைப் போலவே, தன்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் இரத்தமும், தசையையும், உயிரையையும் கொடுத்த விடுதலை இயக்கம், இறுதியில் முற்றும் பயனில்லாமல் போன சோகத்தை குறித்த கேள்விகளையும் அவளில் நாம் காணமுடிகிறது.
தமிழினியின் புத்தகம் 380 பக்கங்கள் உள்ளமையால், அதில் உள்ள ஏராளமான நிகழ்வுகள், தகவல்கள், உபகதைகள் பற்றி இந்த சிற்றுரையில் எழுத சாத்தியமாகாவிட்டாலும், என் மனதில் கவர்ந்த சிலவற்றை குறிப்பிடுகிறேன். பெறும்பாலான போராளிகள் தமிழினியைப் போலவே பதின்ம வயதின் இறுதிகளில் (பொதுவாக 16,17,18 வயதில்) இயக்கத்தில் உள்வாங்கப்படுகின்றனர். இந்த யுவதிகளும், வாலிபர்களும் போராட்டத்திற்காக உட்பட்ட கஷ்டங்களையும், செய்த தியாகங்களையும் தமிழினி தன்னுடைய அனுபவத்தை சொல்லும் போது அதனுடன் யதார்த்தமாக அவைகளையும் சொல்கிறாள். பூநகரி இராணுவ தளத்தை கைப்பற்ற 1993'ல் நடந்த சமரில் தன் உயிர் நண்பியான சங்கவியை இழந்தது பற்றி இந்த புத்தகத்தில் வருவதை நான் எடுத்துகாட்டாக வைக்கிறேன். "என்னுடன் உயிருக்குயிராகப் பழகிய எனது நெருங்கிய நண்பிகளில் பலரை அந்தச் சமரில் எனது கண்ணெதிரிலேயே நான் இழந்து போனேன். அவர்களில் சாம்பவி எனக்கு மிக நெருக்கமான தோழி. மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும், சிறு வயதிலேயே அபாரமான சிந்தனைத் தெளிவும், திறமையும் கொண்டவள். வயல்வெளிக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் வெள்ளம் தேங்கிக்கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிரைக் குடித்து கொண்டிருந்தன. சிறிதாகக்கூடத் தலையை நிமிர்த்திப் பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்துகொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென 'ஹக்' என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க் கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. ஒரேயொரு ரவை சாம்பவியின் மார்பைத் துளைத்து வெளியேறாமல் அவளது இதயப் பகுதியில் தங்கியிருந்தது. குளிரத் தொடங்கியிருந்த அவளது உடலில் ஒட்டியிருந்த இறுதி உயிர்ச் சூட்டை எனது கைகளில் கடைசியாக உணர்ந்தேன். இந்தச் சமரில் தனக்கு மரணம் ஏற்படுமெனச் சாம்பவி கொஞ்சமேனும் நினைத்திருக்கவில்லை. "இந்தச் சண்டை முடிய உன்னுடன் வந்து வன்னியில் இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும். எமது அனுபவங்களைப் புத்தகமாக எழுதவேணும்." இப்படியான நிறையக் கனவுகளும் விருப்பங்களும் அவளிடம் இருந்தன".
இதே சண்டையில், நம் கண்ணை கசிய வைக்கும் இன்னொரு போராளியின் கதை, தமிழினியின் சொல்லுதலில் நம் மனதின் திரையில், புத்தகத்தை வாசித்த பிறகும் நிற்கிறது. "அதே வயல்வெளியில் தலையில் சூடுபட்டு உயிரிழந்து போன இன்னொரு தோழி தாமரை. அதிகமாகப் பேசாமல் அமைதியாகவே இருந்து அனைவரையும் கவர்ந்துவிடும் அவளது கண்களில் இடையறாத சோகம் குடியிருப்பதாக எனக்குப் படுவதுண்டு. யுத்தம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு பூநகரியின் நாலாம்கட்டைப் பகுதியில் எமது அணிகள் இறுதியாகத் தங்கியிருந்த இரவு. இராணுவ முகாமின் பாரிய தேடொளி (focus) விளக்குகள் வழமைபோலச் சுழன்று சுழன்று அப்பிரதேசத்தையே பகலாக்கிக் கொண்டிருந்தன. பரா விளக்குகளும் உயரத்தில் எழுந்து பிரகாசித்துக்கொண்டிருந்தன. எமது சிறிய அணியில் ஒரு போராளி மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். 'உங்கள் ஆவி பிரிந்திடும் அக்கணப் பொழுதில் யாரை நினைத்தீரோ' என்ற வரிகளை கடந்து சென்றபோது எனது மனதில் அம்மாவுடைய முகம் வந்து போனது. எனது பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையிடம் கேட்டேன்; "நீ யாரை நினைப்பாய் தாமரை?" வழமையான அவளின் சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. "நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்." அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப் புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்."
தமிழினியின் தங்கையின் வாழ்க்கை, தமிழீழ போராட்டத்திற்காக தமழினியின் குடும்பம் எவ்வளவு பெரிய விலையை கொடுத்தது என்பதற்கு உதாரணம். தமிழினி தன் தங்கையை பற்றி புத்தகத்தில் பெரிதுபடுத்தி எழுதாவிட்டாலும் அவ்வப்போது வரும் குறிப்புகளில் இருந்து, ஒரு நெகிழ்ச்சியான உறவையும், அதன் முடிவையும், நம் மனக்கண்களில் சோக ததும்பலுடன் உருவகிக்க முடிகிறது. இருவரும் பயிற்சி முகாமில் சந்திக்கும் வேளையே, அவளை முதன் முதலாக தமிழினி அறிமுகம் செய்கிறாள். தமிழினியை பின்பற்றி விடுதலை புலிகள் இயக்கத்தில் சேரும் அவள், மிகவும் உருக்கமாக தமிழினியை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கெஞ்சுகிறாள். "உனக்காகத் தான் நான் இயக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி அழத் தொடங்குகிறாள்". அவளை பற்றி அடுத்த முறை தமிழினி குறிப்பிடுவது, தன்னுடைய பத்திரிகையாளர் கடமைக்காக களமுனை செய்திகளை திரட்டுவதற்காக செல்லும் போது அவளுடைய நண்பி ஓடிவந்து, கையை பிடித்து கூறுகிறாள், "தமிழினி எங்கட சந்தியா நேற்றிரவு கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நடந்த சண்டையில் தலையில் காயப்பட்டு உயிரிழந்திட்டாள்". தங்கையின் வாழ்க்கை பற்றிய சுருக்கிய குறிப்பை புத்தகத்தில் காணமுடிந்தது. அதனை அவ்வாறே இங்கு பகர்த்து உள்ளேன். "என் தங்கை நாகேஸ்வரி (கௌரி) சுப்பிரமணியம் 1975.07.09இல் பிறந்தவள். நான் படித்த அதே பாடசாலையில் படித்திருந்தாள். 1992இல் இயக்கத்தில் இணைந்து என்னுடன் ஒரே பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி எடுத்ததன் பின் சிறுத்தைப் படையணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தாள். அவளது சிவந்த மெல்லிய அழகிய தோற்றத்தைப் பார்த்தவர்கள், "இவ உன்ர தங்கச்சியா" என ஆச்சரியப்பட்டுக் கேட்பார்கள். குடும்பத்தினரில் அளவற்ற பாசமும் குறும்புக் குணங்களும் துணிச்சலும் நிரம்பியவள். அழகான கையெழுத்தில் கவிதைகள் எழுதுவாள், ஓவியங்கள் வரைவாள். 1997 காலப் பகுதியில் நானும் தங்கையும் ஒரே சமயத்தில் மூன்று நாள் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந்தோம். சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் நாங்களிருவரும் அப்போதும் சண்டை போட்டுக்கொண்டோம். என்னைப் போல எந்த நேரமும் புத்தகத்துடன் பொழுது போக்காமல் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவாள். "நான் கெதியிலை, அப்பாவுடன் போயிடுவன். நீ அம்மாவைப் பாத்துக்கொள்" எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல இரண்டு குத்துக் கொடுத்துவிட்டுப் "பைத்தியம் மாதிரி அலட்டாதே" எனக் கடிந்துகொண்டேன்".
தங்கையின் இறுதி நிகழ்வுகளுக்காக தமிழினி வீட்டிற்கு வந்திருக்கும் போது நடந்த கனத்த கணம், தமிழினியின் விவரிப்பில் இவ்வாறு "தங்கையின் இழப்பு குடும்பத்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தொடர்ந்துகொண்டிருந்த போரில் எனக்கும் ஏதாவது நேரிட்டு விடுமென அம்மா அதிகமாகப் பயந்தார். தங்கையின் இறுதி நிகழ்வுகள் முடிந்த கையோடு எனது முகாமுக்குச் செல்ல நான் புறப்பட்டபோது என்னைக் கட்டியணைத்தபடி, "இனிக்காணும் இயக்கத்திலிருந்து விலத்தி வந்துவிடம்மா" எனக் கதறியழுதார். என்னை நம்பி இயக்கத்தில் பல வேலைகள் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது அன்புக்குரிய பல போராளிகள் உயிரிழந்து விட்டிருந்தனர். அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கான திராணி என் மனதிற்கு அக்கணத்தில் இருக்கவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்தபடி அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு நெஞ்சில் நிறைந்த சுமையோடு எனது முகாமைச் சென்றடைந்தேன்".
தமிழினிக்கு தற்போது எழும் கேள்விகள் அவள் விடுதலை இயக்கத்தில் போராளியாக இருந்த போது ஒரு ஒத்திசைவான வடிவத்திற்கு வரவில்லை. தன் போராளி நாட்களை பற்றி கூறும் போது "இயக்கத்தில் எந்த வேலையைத் தந்தாலும் ஒரு உடுப்புப் பையைத் தூக்கிக்கொண்டு உடனே புறப்படத் தயாராக இருந்தனர் போராளிகள். நானும் அப்படியே செயற்பட்டேன். நின்று நிதானிக்காத காட்டாறுபோலக் காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி, பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. மேலும் களமுனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளுமே கேட்காது எமது சக போராளிகள் தமது உயிரை இழந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தியாகங்களுக்கு முன்னால் வேறு எதனாலும் எழுந்து நிற்க முடியாதிருந்தது. 'வீரமரணம்' அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்கப் போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்பதைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை".
ஒரு ஒருங்கிய (coherent) வடிவமாக கேள்விகள் எழும்பவில்லை என்பதற்காக உணர்வு எழுச்சிகள் சில சந்தர்ப்பங்களில் அவளில் ஏற்படாமல் இல்லை. மாத்தையாவுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், பொது மேடையில் அவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று தாங்கள் செய்த குற்றத்தை அறிக்கை செய்யும் போது தமிழினி தன் உணர்வுகளை கூறுகிறாள், "என்னை பொறுத்த அளவில் இலட்சியத்தால் ஒன்றிணைந்த உணர்வு ரீதியான குடும்பமாகவே இயக்கத்தைக் கருதியிருந்தேன். ஆனால் இப்படியான விடயங்களை அறிந்த போது மூச்சுக்கூட விடமுடியாத அளவுக்குப் பயமும் கலக்கமும் ஏற்பட்டது. என்னைப் போலவே பல போராளிகளும் உறைந்து போயிருந்ததை என்னால் உணர முடிந்தது. தமது உணர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சில போராளிகள் இரகசியமாக அழுதுகொண்டிருந்தார்கள்".
முல்லிவாய்க்காலின் அழிவுக்கு பின்னர், அவள் இந்த புத்தகத்தை எழுதும் போது, தன் உயிருக்கும் மேலாக கருதிய இயக்கத்தில் உள்ள பிழைகள் குறித்தும், அதன் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விமர்சனை செய்ய முடிகிறது. இயக்கத்தில் பிரபாகரனின் இடத்தை விளக்கும் போது, "பலரும் விடுதலை புலிகள் இயக்கம் தனிமனித வழிபாடுள்ள இயக்கம் எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான். இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது".
இறுதி யுத்தம் பற்றி எழுதும் போது, விடுதலை புலிகள் இயக்கத்தின் கோரமான உண்மையை பரிசீலிக்கிறாள். எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளது. அப்படியிருக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப் பட்டதிலும் எவ்வளவு அநீதி இருக்கிறது என்று அங்கலாய்க்கிறாள்.
தமிழினி இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு வருடத்திற்குள், புற்று நோயால் மரணமடைந்தாள். தன்னுடைய சாவிற்கு முன்னால் தன் மனதில் உள்ளவைகளை எழுதிவிட வேண்டும் என்ற நோக்குடன் வேகமாக எழுதப்பட்ட சுயசரிதை இது. விரக்தியும் சலிப்பும் மிகுந்த தன் வாழ்க்கை பயணத்தில் இருந்து ஏதாவது ஒரு நன்மையான பாடம் தன் சமூக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இப்புத்தகத்தின் பக்கங்களில் இருந்து மிளிர்கிறது. இந்த விருப்பம் வாசகர்களாகிய நம்மிடமும் பரவி, நம்மையும் சிந்தனை செய்ய வைக்கிறது. புத்தக ஆய்வுக்கும் மேலாக, தனிப்பட்ட முறையிலும் இந்த புத்தகத்தை வாசிப்பது என் இதய சரங்களை இழுப்பதாக இருந்தது. அதற்கு ஒரு காரணம் இந்த புத்தகத்தில் வரும் தமிழ் மக்கள் சமூகத்திற்கும், வங்க கடலால் பிரிக்கப்பட்ட நமக்கும் உள்ள பல ஒற்றுமைகளால் வருவது. இன்னும் மிக பெரிய காரணம், இதில் வரும் பல போராளிகள் என்னுடைய தலைமுறையை சாரந்தவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை பிரயாணமோ, நாம் யோசிக்கக் கூட முடியாத கொடுமையான வண்முறை சூழலிலும், பயங்கரமான தீர்வுகளை எடுக்கும் நிலைகளிலும் பயணிக்கிறது. நான் பிறந்த அதே வருடத்தில், அதே மாதத்தில சில நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவள் முன்னர் நான் குறிப்பிட்ட தமிழினியின் தங்கையான சந்தியா. 1992'ம் வருடம் நான் பள்ளி படிப்பை முடித்து உலகத்தை குறித்த எதிர்பார்ப்போடு கல்லூரிக்குள் காலை எடுத்து வைக்கும் அதே நேரத்தில் அவள் வாழ்க்கைக்கு உத்தரவாதமே இல்லாத அயுதமேந்திய போராட்டத்தில் சேருகிறாள். நான் 1998 இல், என் முதல் வேலையில் அடியெடுத்து வைக்கும் தருணத்தின், ஒரு மாதத்திற்கு முன்பு, அவள் போரில் மரணத்தை சந்திக்கிறாள்.
தமிழினி இறுதி அறிவுரையாக தன் புத்தகத்தில் சொல்லி முடிப்பது ஒரு ஆசை கலந்த நம்பிக்கையின் பிரகடனமே. இனிவரும் தலைமுறை நாங்கள் அடைந்த இன்னல்களை அடையக் கூடாது. அதற்கு அமைதியான அரசியலே நாம் பின்பற்ற வேண்டிய வழி. ஆனால் அது உணர்வு ரீதியாக தீர்வாக பட்டாலும் எவ்வளவு தூரம் நிதர்சனத்தில் அது சாத்தியமாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இப்புத்தகத்தில் தொங்குகிறது.
கடைசியாக நாம் பார்க்கும் எழுத்தாளர், பல சிறு கதைகள், மற்றும் தன் அனுபவங்களை சுய சரிதையாக எழுதிய வெற்றிச்செல்வி. ஈழ விடுதலை போரில் தன் கையையும் ஒரு கண்ணையும் இழந்த வெற்றிச்செல்வியின் எழுத்துகளில் , இவ்வளவு தியாகங்கள் செய்தும் தோல்வி அடைந்தோம் என்பதை தவிர வேறு வருத்தமோ கேள்விகளோ தென்படுவதில்லை. ஈழ விடுதலைக்காக போராடிய புலிகள் இயக்கத்தின் மேலும், தன் சக போராளிகள் மீதும் அவளுக்கு இருக்கும் பெரும் மதிப்பும், மரியாதையும் அவளுடைய எழுத்துகளில் மிளிர்வதை நாம் காணலாம். அவர்களின் வீர அர்ப்பணிப்பு மிகுந்த வரலாற்றை பாதுகாக்கவேண்டும் என்ற உந்துதல் தான் அவளின் எழுத்துகளின் காரணம் என்று சொல்கிறாள். அதே வேளையில் ஒரு ஒரு நேர்மறையான அணுகுமுறையும், ஒரு துணிவையும் அவள் செயல்களில் காணமுடிகிறது. இலங்கை இராணுவத்தினர், சரணடைந்த போராளிகளை பதிவு செய்யும் போது, புலிகளின் அமைப்பில் தான் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்த தகவலை அவள் மறைக்கவில்லை. அதனால் அவளுக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தாலும், அதனை மாற்றி சொல்வது தன் கடந்த காலத்திற்கும், தான் அங்கமாக இருந்த இயக்கத்திற்கும் செய்யும் துரோகம் என்றே கருதுகிறாள். பம்பைமேடு புணர் வாழ்வு மையத்தின் கடினமான சூழ்நிலையிலும் தோய்ந்து போகாமல், நாடகம், இலக்கியம் என்று தன்னையும் மற்றவர்களையும் ஈடுபடுத்தி அந்த குரூர அனுபவத்திலும் ஒரு நேர்மறையை உருவாக்குகிறாள். கலைகளால் தான் மனித சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர உணர்வை வளர்க்க இயலும் என்பது அவளது நம்பிக்கை. புணர் வாழ்வு மையத்தில் நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று சிங்களர்களிடமும் சுமூகமான உறவை ஏற்படுத்த முயலுகிறாள். அவளிடம் இல்லை தனி மனித கோபங்களும், வெறுப்புகளும். அவள் எழுதியதில் நான் படித்தது "ஆறிப்போன காயங்களின் வலி" என்று பம்பைமேடு தடுப்பு முகாமில் தான் சந்தித்த அனுபவங்களை பற்றிய சரிதையும், தன் சக விடுதலை வீரர்களின் வாழ்க்கையை தொகுப்பாக வழங்கும் "குப்பி" என்ற இரு நூல்கள். இப்புத்தகங்கள் பின்பற்றுவது ஒரு எழிய நடை. பொதுவாக இப்போது இலக்கிய மேண்மை என்று கருதப்படுவது, தன்னுடைய சிந்தை, வாழ்க்கையை நுண்ணறிவுடன் திரனாயும் செயல்திரனும், அழகான வருணனையுடன் கதை எழுதும் ஆற்றலையும் சொல்லலாம். வெற்றிச்செல்வியின் நூல்கள் இதற்கு விதி விலக்காகவே உள்ளது. அவளுடைய புத்தகங்கள் உண்மைகளை எழிமையாக, அலங்கரிப்பு ஏதும் இல்லாமல் சொல்லும் தண்மையை கொண்டவை. முன்னர் குறிப்பிட்டதைப் போல் புலிகளின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை ஆவணப் படுத்துவதாகவே அவள் எழுத்துகள் இருக்கின்றது. இதில் அவள் இனம், குழு போன்ற உணர்வுகளை தாண்டி ஒரு எழுத்தாளரின் மேலான கடமையான, உண்மைக்கு சாட்சியாக இருத்தல் ( being witness to the truth) என்பதில் தவறுகிறாளோ என்ற ஐயம் வருகிறது. உதாரணத்திற்கு அவள் விடுதலைப் புலி இயக்கத்திற்குள் கேள்வி கேட்கும் உரிமை இருந்தது என்று குறிப்பிடுகிறாள். அதற்கு உதாரணமாக சொல்லுவது பெண் போராளிகள் பிரபாகரனை கலாயிப்பது, (முக்கியத்துவம் இல்லாத) கேள்விகளை கேட்பது போன்றவை. இயக்கத்தின் பன்முகத் தன்மையான அணுகுமுறைக்கு அவை சான்றல்ல என்பது காரியங்களை கூர்மையைாக பார்க்கும் தமிழினிக்கு தெரிகிறது. வெற்றிச்செல்வியின் இயக்கப் பற்று அவள் கண்களை அதற்கு மறைக்கிறது. இதுவே அவள் பலவீனமாக இருக்கிறது.
.